“அப்பறம் எங்கதான் நீங்க ஏர்போர்ட் கட்டுவீங்க? அனுமதி வாங்கவே 3 ஆண்டுகளாகும்”- டி.ஆர்.பி.ராஜா
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதற்கான அறிவியல் பூர்வமான காரணம் என்ன? என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “பர்மிஷன் வாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம், அதோட வலி எங்களுக்குதான் தெரியும்.. சென்னைல 5 ஏக்கர் நிலம் எடுக்கணும்னாலே நீர்நிலைகள் இல்லாம எடுக்க முடியாது.. அப்பறம் எங்கதான் நீங்க ஏர்போர்ட் கட்டுவீங்க? பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதற்கான அறிவியல் பூர்வமான காரணம் என்ன? ‘நான் சொல்லிவிட்டேன், அதனால் கைவிடுகிறேன்' என்று முதலமைச்சர் கூறுவது எந்த வகையில் சரியாகும்? அப்படியென்றால், அவர் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது. வல்லுநர்களுடன் கலந்தாலோசித்துதான் இந்த முடிவுக்கு வந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். அப்படியென்றால், அந்த வல்லுநர்களுடன் என்ன பேசினீர்கள் என்ற விவரங்களை பொதுவெளியில் வெளியிடுங்கள். அவர்கள் உண்மையான வல்லுநர்களாக இருந்திருந்தால், ‘சார், நீங்கள் அப்போது ஆட்சியில் இல்லை; அதனால் புரிதல் இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டீர்கள்' என்று முதலமைச்சரிடமே சுட்டிக்காட்டியிருப்பார்கள்.
பரந்தூர் விமான நிலையம் போன்ற ஒரு மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தும் முடிவை முதலமைச்சர் எடுக்கிறாறென்றால், அதற்கான காரணம் என்ன? வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றால், அது என்ன முடிவு என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். பரந்தூர் விமான நிலையம் பார்த்துப் பார்த்து செய்த திட்டம். அவ்வளவு கடினமாக உழைத்துள்ளோம். செயல்பாட்டுக்கு வந்திருந்தால் உலகில் ஒரு முதன்மையான விமான நிலையமாக பரந்தூர் இருந்திருக்கும். புதிய இடத்தில் விமான நிலையத்திட்டம் இன்று ஆரம்பித்தால் கூட இன்னும் 3 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு பல்வேறு படிநிலைகளில் அனுமதி வாங்க மேலும் 3 ஆண்டுகள் ஆகும். அப்படி வேறு இடம் தவெக அரசு பார்த்துவிட்டால் உடனடியாக திட்டத்தை தொடங்குங்கள். அந்த புதிய இடம் எது என்று சொல்லுங்கள். அங்கு இருக்கும் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்களா? இதெல்லாம் கடந்து வேறு இடத்தில் இத்திட்டம் தொடங்கினால், கடலில்தான் தொடங்க வேண்டும்” என்றார்.

