அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் - அமைச்சர் வேண்டுகோள்!
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழி நடக்கும் இந்த அரசு, அரசு ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமயத்திலும் அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து அவர்களின் நலன் கருதி பல்வேறு அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. கடந்த 22 ஆண்டுகளில், அரசு ஊழியர்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக 01.07.2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தும் நாளிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. அரசுப் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 2016, 2017 மற்றும் 2019ல் அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தக் காலங்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலங்கள் பணிக்காலமாக வரன்முறை செய்து ஆணையிடப்பட்டது.
அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. அரசுப் பணியாளரின் பணிவரன்முறை செய்யப்படுவதைக் கருத்தில் கொள்ளாமல் பவானி சாகர் அடிப்படை பயிற்சி பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு (பார்வைத் திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, லோக்கோமோட்டர் குறைபாடு) போக்குவரத்துப்படி ரூ.2,500/- ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 2021-22 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்திற்கு சிறப்பு நிதியாக இந்த அரசு வழங்கியுள்ளது. மேலும், நிலுவையிலுள்ள விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத்தொகை மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இதுவரை கடந்த 22 ஆண்டுகளில் மட்டும் 65,075 ஓய்வூதியர்களின் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கிடவேண்டும் என்ற நோக்கத்துடனும், அரசு ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைத்திடவும் பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 27,858 பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் கழக அரசு பொறுப்பேற்ற 22 ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மேலும் 10,000 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் குறைந்த பட்சம் 50,000 பேர்கள் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு அரசுப் பணி நியமனம் பெறுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசுப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில் எவ்விதமான தடங்கலும் இல்லை என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான் இந்த விவரத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களின் செய்தி வெளியீடு#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @TThenarasu @mp_saminathan pic.twitter.com/Q9CKjmtiyZ
— TN DIPR (@TNDIPRNEWS) February 13, 2024
மேலும், பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 243 யினை நடைமுறை படுத்துவது குறித்து வரப்பெற்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அதில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பல்வேறு வகைகளிலும் அரசு அலுவலர்களின் நலனுக்காகப் பல முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய வேறு பல கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், தொடர்ச்சியாக தமிழ்நாடு சந்தித்த இரண்டு மாபெரும் இயற்கைப் பேரிடர்கள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள், அந்தப் பேரிடர் மற்றும் வெள்ள நிவாரண பணிகளுக்கான எதிர்பாராத பெரும் செலவினங்கள், மேலும் இவற்றிற்கு ஒன்றிய அரசிடமிருந்து நிதி ஏதும் பெறப்படாத நிலையில், அதனை மாநில அரசே மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாகவும், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கான மாநில் அரசுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ஆண்டிற்கு ரூபாய் 20,000 கோடி நிறுத்தம் போன்றவற்றின் காரணமாக மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை சற்று அதிகமாகியுள்ளது.
எனினும் அரசு வருவாயைப் பெருக்கி நிதி நிலைமையை சீர்செய்து உயர்த்திடத் தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறோம் விரைவில் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் அரும்பெரும் பணியினை மேற்கொண்டு வரும் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் இந்த அரசு உணர்ந்தே இருக்கின்றது. எனவே, இந்தச் சூழ்நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.