இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை ஏன் இல்லை...?- தங்கம் தென்னரசு விளக்கம்
![ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/c9680730aac3b449d299164b1827ce2a.jpg)
பொங்கல் தொகுப்புடன் அரசால் நிதி வழங்கப்படாத நிலையில் மகளிர் உரிமைத் தொகையை பொங்கலுக்கு முன்னதாகவே வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நாளை துவங்கும் திருவள்ளுவர் சிலை 25வது ஆண்டு விழா ஏற்பாடுகளை கவனித்து வரும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புக்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் சென்னை வட்டார பகுதிகளை தாக்கிய மிக்சாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்காக 19692 கோடி ரூபாயும், கனமழை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்காக 18,214 கோடி ரூபாயும், மத்திய அரசிடம் தமிழக அரசால் கேட்கப்பட்டோம். இரண்டு பாதிப்புகளின் போதும் பொதுமக்களுக்கான நிவாரணத் தொகை உள்ளிட்ட சில தினங்களுக்காக தமிழக அரசால் 2438 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதற்கு மேலாக தற்போதைய பெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பான பணிகளுக்கு 144 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
ஏற்கனவே இரு பாதிப்புகளுக்காக 37.960 கோடியும் பெஞ்சல் புயல் பாதிப்புக்காக 6,625 கோடி ரூபாயும் மத்திய அரசிடம் கேட்ட நிலையில், மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 276 கோடி ரூபாய் மட்டுமே வந்துள்ளது. மத்திய அரசு உரிய நிதி வழங்காததால் கடுமையான விதிச்சுமையில் தமிழக அரசு இருந்தாலும் மாதம் தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை பயனாளிகளுக்கு தவறாமல் வழங்கி வருகிறது. இதன் மூலமும் தமிழக அரசுக்கு பெரும் நிதி சுமை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் தமிழக அரசால் நிதி வழங்காத நிலையில் மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை வரும் மாதம் மட்டும் பொங்கலுக்கு முன்னதாகவே வழங்க திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கூட மத்திய அரசிடம் தொடர்ந்து நிதி கேட்டு தான் பெறவேண்டிய நிலைமை உள்ளது” என்றார்.