பருவமழையின் போது மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர் ஆலோசனை

 
thangam thennarasu

தமிழக நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து விரிவான ஆய்வினை காணொலி மூலம் மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.இந்த சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில், மின் பகிர்மான வட்டங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரிசெய்வதற்கும், அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். மேலும், மின்னகம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், பொதுமக்கள் அனைவருக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.


எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களின் போது மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மின்சார சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்படுமாறும், பணியாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அளித்து பாதுகாப்பான முறையில் மின்கட்டமைப்பை சீர்செய்யும் பணியில் ஈடுபடுமாறும், மின்சார சீரமைப்பு பணிகளுக்கு தேவையான JCB வாகனங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும், அனைத்து வாரிய வாகனங்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும், தேவைப்படின் அருகாமையில் உள்ள மின்பகிர்மான வட்டங்களிலிருந்து பணியாட்களை பணிகளில் ஈடுபடுத்துமாறும், மேலும், இத்தகைய பருவ மழைக்காலங்களின் போது மாவட்ட நிர்வாகத்தினருடன் எப்போதும் தொடர்பில் இருக்குமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.