“பாஜகவின் நெருக்கடியால் விஜய் வீடியோ வெளியீடு”- அமைச்சர் சிவசங்கர்
பாஜகவின் நெருக்கடியால் வீடியோவை வெளியிட்டு திசை திருப்பும் முயற்சியில் விஜய் இறங்கி இருப்பது, அவரது நோக்கத்தை வெளிப்படையாகவே மக்களிடத்தில் உணர்த்தி உள்ளது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “கரூர் சம்பவம் தமிழ்நாட்டிற்கு ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக் கூடாது என்பதை உணர்த்தி இருக்கிறது. யார் பேசுவதை கேட்பதற்காக கூட்டம் கூடியதோ, யாரால் பாதிப்பு ஏற்பட்டதோ அந்த நபர் சென்னை சென்று விட்டார். மாறாக பாதிக்கப்பட்டவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கான பிரதிநிதியாக முதலமைச்சர் நள்ளிரவில் கரூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு சென்றார்.
ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக முதலமைச்சர் உள்ளார். எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக யாருக்காக உயிரை இழந்தனரோ, அவரே அங்கிருந்து ஓடிச் சென்றதை உணர்த்தி இருக்கிறது. மேலும், பாஜகவின் நெருக்கடிகளுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டு திசை திருப்புகின்ற முயற்சியில் அவர் இறங்கி இருப்பது, அவரின் நோக்கத்தை மிக வெளிப்படையாகவே வெளிப்படுத்துகிறது. இந்த நேரத்தில் மக்களுக்கான தலைவராக முதலமைச்சர் இருக்கிறார். மக்களை திசை திருப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற முயற்சியில் தவெகவும், ஆதவ் அர்ஜுனும், பின்னணியில் பாஜகவும் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. எந்த ஒரு இயக்கமும் தன்னுடைய தொண்டர்களை காப்பதற்கு முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால் இறந்து போனவர்கள் உடல் கண் முன்னே விழுந்த போதே, அது குறித்து கவலை இல்லாமல் பேசினார். பேச்சை முடித்து சென்னை ஓடிப்போனார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
விமான நிலையத்தில் 30 பேர் இறந்தது குறித்து செய்தியாளர்களை கருத்தை கேட்க முற்பட்ட போதும், அதை காதில் வாங்காமலும் எந்த இரங்கலும் தெரிவிக்காமல் சென்றார். இரண்டு நாட்களாக இறந்து போனவர்கள் குறித்து எதையும் பேசாது, அவர்களது கட்சியை சார்ந்தவர்கள் எவருமே அங்கு போய் பார்க்கவில்லை. திமுகவைச் சேர்ந்தவர்களும், அதிமுகவை சேர்ந்தவர்களும் போய் நின்றோம். அதன் பின்னர் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் அங்கு வந்தனர். என் கட்சியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டதற்கு, முதலமைச்சர் சென்று பார்த்துள்ளார். அதற்கு நன்றி சொல்கிறேன் என அவர் சொல்லி இருக்க வேண்டும். அதை சொல்லாது மீண்டும் திசை திருப்புகின்ற அரசியலில் இறங்கியுள்ளார். என்னை கைது செய்யுங்கள் என அவர் சொல்கிறார் எனில், அவர் அரசியல் செய்கிறார். மக்களுக்கான தலைவராக அவர் இல்லை.
இது அத்தனைக்கும் காரணம் இவர்கள் அறிவித்த நேரம் ஒன்று. வந்து சேர்ந்த நேரம் ஒன்று. தனது வாகனத்தில் விளக்கை போட்டால் வந்திருப்பவர்கள் பார்த்து திரும்பிச் சென்று விடுவர் என விளக்கையும் அணைத்துவிட்டு, ஷட்டரையும் இழுத்து மூடிக்கொண்டு அந்தக் கூட்டத்தை பேசுகிற இடம் வரை அவர் அழைத்துச் செல்கிறார். எந்த அரசியல் கட்சித் தலைவரும் செய்ய துணியாத காரியத்தை தமிழ்நாட்டில் அவர் செய்கிறார். விஜய் திரைப்பட நடிகர் என்கின்ற மனப்பான்மையிலிருந்து விலகவில்லை. மாறாக எல்லோரையும் விசில் அடிச்சான் குஞ்சுகள் என நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் இவ்வளவு உயிரிழப்புகள். அவர்கள் இதை அரசியல்வாக்க பார்க்கின்றனர்” என்றார்.

