மீனவர்கள் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்- அமைச்சர் ஸ்ரீநாத்

 
ஸ்ரீநாத்

மீனவர்களின் உடல்களை பத்திரமாக குடும்பத்தாரிடம் ஓப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே துயர சம்பவத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். 

கடைசி வரை அவருடன் இருப்பேன் - அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி|.I will be with him  till the end - Minister Srinath Interview

இதுதொடர்பாக அமைச்சர் ஸ்ரீநாத் தனது எக்ஸ் தளத்தில், "கடந்த 29.10.2026 அன்று சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திரு செல்வழகன் த/பெ. துரைக்கண்ணு என்பவருக்குச் சொந்தமான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு 9 பணியாளர்களுடன் தங்கு கடல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் ‘முரசு’ புயல் தொடர்பாக முறையாக புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அந்தப் படகு ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதாக படகு உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 02.11.2026 அன்று இரவு, அந்தப் படகு ராமாயபட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும், நடுக்கடலில் என்ஜின் செயலிழந்ததாகவும், அத்தகவல் மறுநாள் (03.11.2026) அதிகாலை திரு வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுக்கு, காணாமல் போன படகில் இருந்த பணியாளர்களால் வயர்லெஸ் தொடர்பு மூலம் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அக்காணாமல் போன படகிலிருந்து தகவல்தொடர்பு ஏதும் வரவில்லை.

இந்த செய்தி அறிந்ததும் உடனடியாக தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பி துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு முழுவீச்சில் மீனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்தினேன். இதனைத் தொடர்ந்து, உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்தும், நிஜாம்பட்டினத்திலிருந்தும் மீன்பிடிப் படகுகளைக் கொண்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது. அதேநேரத்தில் இந்தியக் கடலோரக் காவல் படையின் இரண்டு ஹோவர்கிராஃப்ட் (Hovercraft), ஒரு விரைவுப் ரோந்துக் கப்பல் (Fast Patrol Vessel – FPV) மூலம் தேடுதல் தீவரப்படுத்தப்பட்டது. அதேபோல் கடலில் தவறிய மீனவர்கள் எங்காவது தத்தளித்துக் கொண்டிருக்கையில் அவர்களை விரைவாக மீட்க வானூர்தி மூலமும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தேடுதல் பணியானது துறைசார்ந்த வல்லுநர்கள், கடல் ஆராய்ச்சியாளார்கள், காற்றின்போக்கு உள்ளிட்டவைகளை மையமாக கொண்டு காலதாமதம் ஏதுமின்றி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டிலிருந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களைக் கொண்ட ஒரு குழு ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு, தொடர்ந்து தேடுதல் பணி நடந்தது. 

இந்நிலையில் பேரிடியாக காணாமல் போன படகு புயலில் சிக்கி மூழ்கி இருப்பதும், 5 மீனவர்கள் உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது.  அவர்களது உடல்கள் 05.11.2026 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகவல் கிடைக்கப்பெற்றதும், நானும் ஆர்.கே நகர் சட்டன்ற உறுப்பினருமான மாண்புமிகு நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சரும்  கலந்தாலோசித்தோம். அதன்படி ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மாண்புமிகு அமைச்சர் விரைந்து சென்று, இறந்த மீனவர்களின் உடல்களை அடையாளம் காணுதல் மற்றும் பிற சட்டபூர்வ நடைமுறைகளை விரைவுபடுத்தினார். நான் இங்கு துறை அதிகாரிகளுடன் மீதமுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க உள்ள வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டேன். அதேபோல் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பது தொடர்பாகவும் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ 7 லட்சம் அறிவிக்கப்பட்டு உடனடியாக அதில் ரூ 2 லட்சத்துக்கான காசோலை விடுவிக்கப்பட்டது. அதன்படி, மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்கள், சென்னைக்கு மீன்வளத்துறை மூலம் கொண்டுவரப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உயிரிழந்த மீனவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினேன்.

இந்த கடினமான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரில் பங்கெடுத்து வந்த நிகழ்வைக்கூட அரசியலாக்கி குளிர்காய்வது பெரும் வேதனையை தருகிறது. அவர்களைபோல மோசமான அரசியலை செய்ய நான் விரும்பவில்லை. பாதிக்கபட்டவர்களின் குடும்பத்துக்கு மாண்புமிகு முதல்வர் தலைமையிலான த.வெ.க அரசு உறுதுணையாக இருக்கும். அதே நேரத்தில் இதுபோன்ற பேரிடர் இனி எப்போதும் நிகழாமல் இருக்க தமிழ்நாடு அரசும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையும் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை செய்துவருகிறது. அதேபோல் நடந்த துயரம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மீன்வளத்துறை ஒருங்கிணைப்பில் நடந்த தொடர் தேடுதல் பணிகளில், வானூர்தி உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டது. அதன் விளைவாக, எஞ்சிய 2 மீனவர்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. மீனவர்களின் உடல்களை பத்திரமாக குடும்பத்தாரிடம் ஓப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே துயர சம்பவத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.