ராமர் வாழ்ந்ததற்கான ஆதாரங்களோ, வரலாற்று சான்றுகளோ இல்லை: சிவசங்கர்
ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது ஆதாரமும் கிடையாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ராஜேந்திர சோழன் கட்டிய கோவில், சிற்பங்கள், செப்பேடுகள் இருக்கிறது. ஆனால் ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது, ஆதாரமும் கிடையாது. ராமர் பற்றி பேசுபவர்களே அவரை அவதாரம் என்றுதான் குறிப்பிடுவார்கள். ஒரு அவதாரம் என்றால் பிறக்க முடியாது. கடவுளாக பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது. நம்மை மயக்கி, நம்முடைய வரலாற்றை மறைத்து வேறு ஒரு வரலாற்றை உயர்த்தி காட்டுவதற்காகதான் இதையெல்லாம் செய்கிறார்கள்.
வரலாறோ, ஆதாரமோ இல்லாத ராமருக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறோம். 3000 ஆண்டுகள் வரலாறு கொண்ட ராஜேந்திர சோழனையே நாம் கொண்டாட வேண்டும். ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கோயில் கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளன. ராஜேந்திர சோழனின் ஆட்சிமுறை குறித்து இளைய சமுதாயம் தெரிந்து கொள்ளவே பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. ராமருக்கு பிறந்தநாள் கொண்டாட திணிக்கப்படுகிறது” எனக் கூறினார்.


