மத்திய அரசிடம் இருந்து போக்குவரத்து துறைக்கு நிதி வழங்கப்படவில்லை- அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்து துறையில் வருகிற மாதத்தில் புதியதாக 3200 பேர் பணிக்கு எடுக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால், தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிப்பதாக குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம், சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தி.மு.க. எம்.எல்.ஏ வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர். இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் உட்பட வழக்கில் தொடர்புடைய 27 பேர் கடலூர் முதன்மை நீதிமன்ற நடுவர் சுபத்ராதேவி முன்னிலையில் ஆஜராகினர். இதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம், போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 20 மாத பணப்பலன்கள் கொடுக்கப்படவில்லை என்றும், ரூ.3 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளதே என்று கேள்வி எழுப்பியதற்கு, ரூ.3 ஆயிரம் கோடி அரசிடம் இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களில் அந்த பணம் எடுத்து செலவிடப்பட்டுள்ளது. அதனால் அரசின் பணத்தை கொடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது. கடந்த காலங்களில் நடந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போதைய முதலமைச்சர் தான் ஒவ்வொன்றாக தீர்வு கொடுத்து வருகிறார் என்றார்.
![]()
தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், “பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டு 4800 புதிய பஸ்கள் வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதே போல் புதிய பணியாளர்கள் 680 பேர் எடுக்கப்பட்டுள்ளனர். வருகிற மாதத்தில் 3200 பேர் பணிக்கு எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து துறை சீரமைக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் பாக்கி இருந்த தொகையும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து போக்குவரத்து துறைக்கு நிதி வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு தான் போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்குகிறது. அரசு பேருந்துகளை விழாக்காலங்களில் இயக்கும் போது கூடுதலாக பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல முனைகின்றனர். அதற்கு கூடுதல் பஸ்கள் தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் வழித்தடங்கள் பயணிகள் ஏறாத பஸ்களை பெருநகரங்களில் இயக்குவது வழக்கம். தற்போது அந்த சூழ்நிலை மாற்றப்பட்டு தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருகிறோம். கடந்த காலங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து அரசு பஸ்களில் பயணித்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை உயர்ந்து ஒரு மாதத்திற்கு 2 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். அதேபோல் முன்பதிவில்லா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினைகளை சமாளிக்க மாவட்டங்களில் உள்வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளை எடுத்தால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கில் தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து இயக்குகிறோம். இதில் அரசுக்கு நஷ்டம் கிடையாது, லாபம் தான் கிடைக்கிறது” என கூறினார்.


