தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான்...மன்னிப்பு கேட்க வேண்டும் - அமைச்சர் சிவசங்கர் பேட்டி
தேச பக்தியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்ததுபோல தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் பிரச்னையை மீண்டும் எழுப்பியுள்ளார் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார். சபாநாயகர் அப்பாவு பொன்னாடை போர்த்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கிளம்பினார். உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். தேசிய கீதம் பாடவில்லை என கூறி அவர் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இந்த நிலையில், ஆளுநர் வெளியேறியது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் மரபின் அடிப்படையில் என்ன நிகழ்வு நடக்க வேண்டுமோ, அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று ஆளுநர் ரவி நினைக்கிறார். அது முடியாது. 59 பக்கத்தில் அரசின் சாதனைகளை, திட்டங்களை உரையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை படிக்க வேண்டும் என்பதால் உரையை வாசிக்காமல் வெளியேறியுள்ளார். தேச பக்தியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்ததுபோல, தேசிய கீதம் பிரச்னையை மீண்டும் எழுப்பியுள்ளார். தேச பக்தியில் தமிழ்நாட்டு மக்களவைவிட, ஆளுநர் பெரிய ஆள் இல்லை. தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான். அதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கூறினார்.