ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை- அமைச்சர் சிவசங்கர்

 
சிவசங்கர்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Sivasankar

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ஆம்னி பேருந்துக்கு பதிலாக பொதுமக்கள் அரசு பேருந்தை பயன்படுத்த  வேண்டும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. நாளை வரை பொதுமக்களுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க தயாராக உள்ளோம். அரசின் கோரிக்கையை ஏற்றுதான் ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் என்பது ஒப்பந்த அடிப்படையில் இயங்குகின்றன. ஆம்னி பேருந்துக்கு மாநில அரசு கட்டணம் நிர்ணயிக்க முடியாது. பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து அலுவலர்கள் தணிக்கை செய்வார்கள், அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அரசு பேருந்தை பயன்படுத்த வேண்டும். புதிய பேருந்துகள் டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும். அரசு பேருந்துகளில் உள்ள குறைபாடுகள் களையப்படுகின்றன. பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிரமம் இல்லாத வகையில்தான் வாகனங்களுக்கான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.