முதல்வர் ஜப்பானில் இருந்து அழைத்து போராட்டத்தை நிறுத்த அறிவுறுத்தினார்- சிவசங்கர்
போக்குவரத்து தொழிலாளர்களின் ஒற்றை கோரிக்கை பேசி தீர்க்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி அளித்துள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் ஜப்பானில் இருந்தாலும் உடனடியாக என்னை அழைத்து போராட்டத்தை நிறுத்த அறிவுறுத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தொடர்பு கொண்டு தகவல் சொன்ன காரணத்தினால் தொழிற்சங்க தலைவருடன் பேசினேன். அவர்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகள் குறித்து நேரடியாக பேசி முடிவெடுக்கலாம் என கூறினேன். அதன் அடிப்படையில் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு உடனடியாக பேருந்துகளை இயக்க தொழிற்சங்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்டு தற்போது அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்களுடைய இருப்பிடங்களுக்கு செல்வதற்கு பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளின் பயிலும் மாணவர்களுக்கு ஆயிரம் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் திட்டத்தின் காரணமாக தற்போது அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறையுடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்து அவர்களுக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.


