பொங்கல் பண்டிகை- 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் போக்குவரத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி , அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் , போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “பொங்கல் பண்டிகையையொட்டி 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 14,104 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் ஆக மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிளுக்காக 15 ஆம் தேதி முதல் 19 ஆம் வரையில், தினசரி இயக்கக் கூடிய 10,460 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும் பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என ஆக மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கேளம்பாக்கம், கோயம்பேடு, மாதாவரம் பேருந்து நிலையங்களிலிருந்து இந்த சிறப்பு பேருந்துகள் என்பது இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகளும், கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகளும் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும்” என தெரிவித்தார்.
பொங்கலுக்கு முன்பாக 10 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரை இயக்க உள்ள பேருந்துகளின் விவரங்கள்:
10 தேதி தினசரி இயக்கக்கூடிய பேருந்துகள் 2,092 பேருந்துகளோடு, சென்னையிலிருந்து 1,445 சிறப்பு பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களில் இருந்து 1,560 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
11 ஆம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளோடு சென்னையிலிருந்து 1,680 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 1,850 பேருந்துகளும் இயக்கப்படும்
12 ஆம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளோடு சென்னையிலிருந்து 1,239 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 1,510 பேருந்துகளும் இயக்கப்படும்
13 ஆம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளோடு, சென்னையில் இருந்து 1,372 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 2,880 பேருந்துகளும் என மொத்தமாக 21,904 பேருந்துகள் இயக்கப்படும்
வழித்தட மாற்றம்:
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள். தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொங்கல் முடிந்து 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இயக்கப்படும் பேருந்துகள் குறித்தான விவரங்கள்:
15 ஆம் தேதி தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளோடு, பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 860 பேருந்துகளும் பிற இடத்தில் இருந்து 900 பேருந்துகளும் இயக்கப்படும்.
16 ஆம் தேதி பொருத்தவரை வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளோடு சென்னைக்கு 900 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 1,082 பேருந்துகளும் இயக்கப்படும்
17 ஆம் தேதி தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். அன்றைய தினம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை
18 ஆம் தேதி பொருத்தவரை தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளோடு பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 1,320 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 1,707 பேருந்துகளும் இயக்கப்படும்
19 ஆம் தேதி வழக்கமாக தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளோடு பல்வேறு இடத்திலிருந்து சென்னைக்கு 2,210 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 3,237 பேருந்துகள் என மொத்தமாக 22, 676 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
பயணிகளின் வசதிக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை குறித்தான தகவல்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24 ×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற Toll free Number மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற எண்ளை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவித்தார். மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள்:
பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும். கிறிதுஸ்மஸ் விடுமுறை நாட்களில் கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் சாலையில் ஆம்னி போக்குவரத்துகளை நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக புகார் வந்தது. கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மதுரவாயல் சுங்கச்சாவடியில் கூடுதலாக பேருந்துகளை நிறுத்தி அங்கேயும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். ஓரிரு நாட்களில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து போக்குவரத்து ஆணையர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இந்த அறிவுரைகள் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்ட நேரம் திறந்து வைக்கப்பட்டது. பொங்கலுக்கும் அதே பின்பற்றப்படும். ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும். இந்த ஆண்டு பொங்கலுக்கு 7 லட்சம் மக்கள் ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளின் போது தனியார் பேருந்துகளை ஒப்பந்த எடுத்து இயக்கினோம். இந்த ஆண்டு 8 கார்பரேசனில் அந்த சூழலுக்கு ஏற்ப இயக்கப்படும். அப்போது ஏற்கனவே உள்ள டெண்டர் அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.