ஜி-ஸ்கொயர் விவகாரம் குறித்து எஸ்.பி.வேலுமணி பதிலளிப்பார்- செங்கோட்டையன்
G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “மேட்டூர் அணை திறப்பு தேதி குறித்து CM விஜய் விரைவில் அறிவிப்பார். மேட்டூர் அணை திறப்பிற்கு CM விஜய் வருவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக செய்தித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இவை மக்களிடம் பரவாமல் தடுக்க முறைப்படுத்தப்படும். ஜி-ஸ்கொயர் விவகாரம் குறித்து எஸ்.பி.வேலுமணி பதிலளிப்பார். ஏறத்தாள 18 மலைகள் காணாமல் போனது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். மலைகள் காணாமல்போன வழக்கில் அனைத்தும் பினாமி பெயரில் தான் உள்ளது.. போக போக தான் தெரியும். இதற்கு யார் உடந்தையாக இருந்தது என்பதைத்தான் காணவேண்டும்... இருப்பதெல்லாம் பினாமி பெயரில்தான். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால் அதிமுக MLA - க்கள் ராஜினாமா செய்தனர். இதுகுறித்து தோழமைக் கட்சிகள் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளனர். எங்கள் நிலை வேறு, எடப்பாடி பழனிசாமி நிலை வேறு” என்றார்.

