"CM விஜய் இருக்கும் வரை மேகதாது அணை கட்ட முடியாது”- அமைச்சர் செங்கோட்டையன்
CM விஜய் இருக்கும் வரை மேகதாது அணை கட்ட முடியாது. கர்நாடக அரசு மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “முதலமைச்சர் விஜய் இருக்கும் வரை கர்நாடகா மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது, அணை கட்டவும் முடியாது. காவிரி விவகாரத்தில் தமிழக பிரதிநிதிகள் கர்நாடகா செல்வது வழக்கமான ஒன்றுதான். ஜெ. ஆட்சியில் ஓபிஎஸ், சி.வி. சண்முகம் கர்நாடகா சென்றனர். பொதுவாக தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் குடிநீர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை ஆய்வு செய்துவருகிறோம். விரைவில் நிலத்தடி நீர் அதிகமுள்ள பகுதிகளில் ஆள்வாய் கிணறுகள் அமைத்து அவர்களுக்கு சீரான முறையில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.பல கோடி ரூபாய்களை செலவு செய்தும் வெற்றி பெற முடியாமல் தடுமாறும் அரசியல் சூழலில், வெறும் 76 ஆயிரம் ரூபாய் செலவில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறக்கூடிய வரலாற்றை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில்தான் உருவாக்கிக் காட்ட முடியும்.
முதல்வர் விஜய் வாழ்க்கையில் இதுதான் கடைசி படம் என்று சொன்னதற்கு பிறகும் ஜனநாயகன் படத்தை முடக்கி வெளியே வராமல் செய்தது யார் என்பது நாடறியும். மக்களே இன்று ஜனநாயகன் படத்தை பார்க்க வேண்டும் என்று லட்சக்கணக்கானோர் கோடிக் கணக்கானோர் திரண்டு வந்து படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்க்கும்போது அவர்களுக்கு கஷ்டமாக தான் இருக்கும் தேர்தலுக்கு முன் வந்திருந்தால் 234 தொகுதிகளும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றிருக்கும்"” என்றார்.

