"நாங்க ஆட்சி கட்டிலில் ஏறிய பின் தான்..." - அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

 
அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் இந்துக்களால் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் அனுமன் கோயில்களில் வடமாலை சாத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கோயில்களுக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த விழாவில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தனும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேகசுகையில், "திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல. திமுக ஆட்சி கட்டிலில் ஏறிய பிறகுதான் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில்களில் தமிழில் அர்ச்சனை, ஓதுவார்களுக்கு ஊக்கத் தொகை, பயிற்சி பள்ளிகள், அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை, கோயில்களின் பெயரில் அறக்கட்டளை பள்ளிகள், கல்லூரிகள் என பல திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

கோயிலில் குவிந்த பக்தர்கள்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு மேலும் பல திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 437 பேரிடம் இருந்து ரூ 1,640 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அது போல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தையும் திமுக அரசு தொடங்கிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.