"அண்ணாமலையை பாஜக மறந்து விட்டது”- அமைச்சர் சேகர்பாபு
பெரியாரின் போர்படைத் தளபதி, காஞ்சிபுரம் தந்த தனிப்பெரும் தலைவன், சாமானிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்றும் தென்னாட்டு பெர்னாட்ஷா என்றும் அன்போடு போற்றப்படுபவர் பேரறிஞர் அண்ணா....அந்த வகையில் பேரறிஞர் அண்ணாவின் 57-ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களால் அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு வேட்டி சேலைகளை சேகர்பாபு வழங்கினார்.. முன்னதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு ஆகியோர் ஏழை எளிய பொதுமக்களுக்கும், ஆன்மீக பக்தர்களுக்கும் சாம்பார், அப்பளம், வடை, கேசரி, பாயசத்துடன் கூடிய சமபந்தி உணவு பரிமாறி பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

இறுதியாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “சென்னையில் 30 திருக்கோவில்களில் சமபந்தி அன்னதானம் நடைபெறுகிறது. சமத்துவத்தை வலியுறுத்துகின்ற நிகழ்ச்சி, எல்லோருக்கும் எல்லாம் என்ற கனவுக்கு பட்டியல் போடும் நிகழ்ச்சி. அண்ணாவின் கொள்கை கோட்பாடுகளை கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் அண்ணாவிற்கு புகழ் சேர்க்கும் வகையில் முதலமைச்சர் தொகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட திருமண மாளிகைக்கு அண்ணா பெயர் சூட்டினார். விரைவில் திறக்கப்பட உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அண்ணா பெயர் சூட்டப்பட உள்ளது. பல்வேறு நலத்திட்டம் , கட்டடங்களுக்கு அண்ணா பெயரை தாங்கியுள்ள கட்சிகளை காட்டிலும்.. திமுக அதிகமாக சூட்டி உள்ளது.
அண்ணா எனும் பசுவின் மீது அமர்ந்த காகம் தற்போதைய திமுக என அண்ணாமலை விமர்சிக்கிறார். அண்ணாமலை பாஜகவில் என்ன நிலைமையில் இருக்கிறார் என்றே தெரியவில்லை, அண்ணாமலை பாஜக கட்சி வேண்டும், என்று செல்கிறாரா? வேண்டாம் என்று செல்கிறாரா? என்றே தெரியவில்லை. பாஜக அண்ணாமலையை மறந்து விட்டது” என்றார்.


