"அந்த வார்த்தைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை" - ஜனநாயகன் குறித்து அமைச்சர் சேகர்பாபு
தடைகள் பல உண்டென்றால் அதை தகர்த்தெறியும் திறன், 75 ஆண்டுகால பவள விழா கண்ட திராவிட இயக்கத்திற்கு உண்டு, இந்த வார்த்தை திமுகவுக்கு சொந்தமான வார்த்தை, அந்த வார்த்தைக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் சம்பந்தமில்லை என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். வரும் 7ஆம் தேதி முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்திலிருந்து பிரித்து இயக்கப்படவுள்ளது. இரண்டு தற்காலிக பேருந்து நிலையத்திலும் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள், பேருந்து நிற்கும் வழித்தட எண் கொண்ட பதாகைகள், மகளிர் பாலூட்டும் அறை, முதலுதவி அறை, பெண்கள் ஆண்களுக்கு என தனி கழிப்பிடம், பயணிகளுக்கான இலவச குடிநீர் அனைத்து என அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பேருந்து நிலையங்களில் இந்து சமய அறநிலையம் மற்றும் சி எம் டி ஏ துறைகளின் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்ச சேகர்பாபு, “வட சென்னையின் துவக்க இடமாக உள்ள பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்தக்கூடிய பணி இந்த மாதத்தில் தொடங்கும். ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையம் 4 ஏக்கர் பரப்பளவில் சுமார் 7.74 கோடி செலவில் ஒரு நாளைக்கு 40 முதல் 50 ஆயிரம் மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான கழிப்பிடம் குடிநீர் வசதி, சிறிய உணவகம், ஆவின் பாலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 34 பேருந்துகள் நிற்கும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ட்ரிப் பேருந்துகள் வந்து செல்லும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிலையத்திலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் வடசென்னை மக்களின் பொற்காலத் திட்டம் வடசென்னை திட்டம்” என்றார்.

நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் வழங்குது குறித்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி நிர்மல் குமார் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, தடைகள் பல உண்டென்றால் அதை தகர்த்தெறியும் திறன் என்பது 75 ஆண்டுகால பவள விழா கண்ட திராவிட இயக்கத்திற்கு உண்டு. இந்த வார்த்தை திமுகவுக்கு சொந்தமான வார்த்தை. அந்த வார்த்தைக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் சம்பந்தமில்லை. ரூ.800 கோடி செலவில் கட்டப்படவுள்ள "குறளகத்துடன் இணைந்த பல்நோக்கு போக்குவரத்து வசதி வளாகம்" பெருந்திட்டத்திற்கான துவக்க விழா, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால், இம்மாதம் 25ஆம் தேதிக்குள் நடைபெறும் என தெரிவித்தார்.
முன்னதாக தவெக இணை செயலாளர் நிர்மல் குமார், “ஜனநாயகன் படத்தை பல வாரங்களுக்கு முன்பே சென்சார் உறுப்பினர்கள் பார்த்து U/A சான்றிதழை கொடுக்க பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம். தட்டி பறிக்க சில கூட்டமும் வரலாம். அனைத்து தடைகளையும் தகர்த்து வெற்றி வாகை சூடுவோம்” என்றார்.


