"நாங்க 234 சொல்லியிருந்தா, அவர் 244 சொல்லியிருப்பார்! அதிமுக கரையான் புற்று போல் கரைந்து கொண்டிருக்கிறது" - சேகர்பாபு

 
ச் ச்

திமுகவுக்கு ஆதரவாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை சூறையாடி விட கூடாது என்பதற்காக தான் SIR பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி, வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூபாய் 2.81 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகத்திற்கான பூமி பூஜையில் இந்துசமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட முதல்வர் படைப்பகம் மூன்று இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கொளத்தூரில் திறக்கப்பட்ட முதல்வர் படைப்பதால் தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். பெருமையின் நிறமாக சென்னை மாநகராட்சி பள்ளிகள் மாறிக்கொண்டு வருகிறது. திமுக 200 தொகுதிகளில் வெல்வோம் என சொன்னதால் எடப்பாடி பழனிசாமி 210 இடங்களில் வெல்வோம் என சொல்லி உள்ளார், நாங்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சொன்னால், எடப்பாடி பழனிசாமி ஒருபடி மேலே போய் 244 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என  இல்லாததை சொல்வார். ஏட்டிக்கு போட்டியாக பேசுவது தான் எடப்பாடி பழனிச்சாமியின் வேலை, அதிக இடங்களில் திமுக வெற்றி பெறும்.

அரசியல் நாகரிகத்தோடு எடப்பாடி பழனிச்சாமி பேச வேண்டும். திமுக மீது வெறுப்பின் உச்சத்தில் உள்ளார். கரையான் புற்று போல் அதிமுக கரைந்து கொண்டு செல்கிறது. திமுகவுக்கு ஆதரவாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை சூறையாடி விட கூடாது என்பதற்காக தான் SIR பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்” என கூறினார்.