“இனி சாலைகளில் மாடுகள் சுற்றி திரியாது... சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கோசாலை”- சேகர்பாபு

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளுக்கு கோசாலை அமைப்பது உன்னதமான திட்டம், அதற்காக இந்து சமயஅறநிலையத்துறையின் இடங்களை தேர்வு செய்து மாநகராட்சிக்கு கொடுக்க உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை திமுக கிழக்கு மாவட்டம் சார்பாக வில்லிவாக்கம் ஏரிக்கறை பாரதி நகர் மற்றும் வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலை உள்ள எம்பார் நாயுடு 2 ஆவது தெருவில் ’அன்னம் தரும் அமுதக்கரங்கள்’ நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அதனை தொடர்ந்து வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் கீழ் உள்ள கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தின் எதிரே பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக 1.48 கோடி ரூபாய் மதிப்பிட்டில் புதிய கோசாலை அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் வில்லிவாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக 27.50 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 45 கோடி மதிப்பீட்டில் பொழுதுபோக்கு அமாசங்கள் கூடிய கண்ணாடி தொங்கு பாலம் பூங்கா மற்றும் கூடுதலாக சுமார் 8.50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 7.90 கோடி மதிப்பில் கூடுதல் குளம் அமைக்கப்பட்டு வருகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் சென்னை பெருநகர மாநகராட்சியின் சார்பில் ஆங்காங்கே சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி தருவதற்காக பசு காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் மட்டும் சாலைகள் சுற்றி திரியும் கால்நடைகளால் சுகாதார சீர்கேடுகள் மற்றும் ஆபத்தான சூழல் நிலவுவதால் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கான முதல் முதலில் திட்டமிடல் வகுக்கப்பட்டது இந்த ஆட்சியில் தான்.
முதலில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அரை ஏக்கர் இடத்தில் இன்று கோசாலைக்கான பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பணிகள் முடிவுற்று சென்னையில் மாடுகள் எங்கும் சுற்றி திரியாத சூழல் ஏற்படுத்தப்படும். இதை முன்னெடுத்து உள்ள சென்னை மாநகராட்சி முழு வேகத்தில் அதற்கான பணிகளை எடுத்துள்ளது. அதற்கு இந்து சமய அறநிலைத்துறை இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பசு காப்பகங்களுக்கு அர்ப்பணிக்க துறையை உத்தரவிட்டுள்ளோம். இது உன்னதமான திட்டம்” என தெரிவித்தார்.