நடிகை குஷ்புவை ஆடுகளுடன் அடைக்கவில்லை- சேகர்பாபு
சென்னை துறைமுகம் மற்றும் எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை உட்வார்ப்பு மற்றும் பெரியமேடு அரசு கால்நடை மருத்துவமனை எதிரில் உள்ள நேவல் மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக நடைபயணம் மேற்கொண்டு அந்த பகுதி மக்களின் குறைகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கேட்டறிந்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “பொதுமக்கள் கூறும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது. பொதுமக்களே என் தொலைபேசிக்கு அழைத்து வாழ்த்துகிறார்கள். இந்த நிகழ்விற்கு பொதுமக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆடுகளுடன் நடிகை குஷ்புவை அடைக்கவில்லை, முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டம் நடத்தும் பொழுது மக்களுக்கு ஏற்படும் துன்பங்களையும் கணக்கிட வேண்டும், திடீரென்று நடைபெறும் போராட்டத்தால் அருகில் எங்கு இடம் வசதி உள்ளதோ அங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். கைது செய்யப்படாமல் உடனடியாக ஜாமீனில் வெளியே விட்டு விடுகிறார்கள், ஆட்டு கொட்டகை வேறு குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு....
தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த அனுமதி கிடைப்பதில்லை என எந்த கண்ணோட்டத்தில் இது குறித்து பாலகிருஷ்ணன் கருத்து கூறினார் என்று தெரியவில்லை, இந்த ஆட்சியில் தன் ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்தது கடந்த ஆட்சிக்காலம், போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை” என்று கூறினார்.