யார் அந்த சார்? - ஈபிஎஸ் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
பொள்ளாச்சி வன்முறையில் ஈடுபட்ட சார் யார் என்பதை அதிமுகவினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட யாதவாள் தெருவில் வீதி வீதியாக நடந்து சென்று மக்கள் தேவைகளை கண்டறியும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மற்றும் அரசின் பல துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். வீதியாக சென்ற அமைச்சர் சேகர்பாபு சாலைகள், கேபில் கம்பங்கள், மழைநீர் கால்வாய்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து சீரமைக்கப்பட வேண்டியவைகளை விரைவில் சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அந்த பகுதியில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனைக்குள் ஆய்வுக்கு சென்ற அவர் மருத்துவர்கள் மற்றும் அங்கு சிகிச்சைக்கு வந்தவர்களிடம் குறை,நிறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “பொள்ளாச்சி வன்முறையில் ஈடுப்பட்ட சார் யார்? என்பதை அதிமுகவினரால் கண்டுபிடிக்க முடியவில்லை, தற்போது அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுப்பட்ட குற்றவாளியை கைது செய்து முதல் கட்ட நிவாரணமாக அந்த குற்றவாளி கட்டோடு இருந்ததை பார்த்திருப்பீர்கள்...மேலும் அனைவரும் இந்த பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்குக்கிறார்கள் என்பது அனைத்து மக்கள் மனதிலும் கல்வெட்டாக அமைந்துள்ளது. இதோடு எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திகொண்டால் நன்றாக இருக்கும், இல்லையென்றால் அவரை நோக்கி மக்கள் போராடும் சூழல் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறேன். மேலும் நாள்தோறும் போராட்டம் போராட்டம் என்று வீதிக்கு வரும் போது பாதிக்கப்படுகிற மக்கள் நிலையை எண்ணி பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.