சொந்த குடும்பத்தில் இழப்பு ஏற்பட்டபோதிலும் மக்கள் பிரச்சனைக்காக ஓய்வின்றி பணியாற்றும் முதல்வர்- சேகர்பாபு
சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடி வளாகம் அதை சுற்றி உள்ள பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் இந்த பருவமழைக்குள் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி அப்பகுதியில் சாத்தியமில்லை, அதிக மழை பெய்தால் நீர் தேக்கத்தை தடுப்பதற்கு சக்திவாய்ந்த ராட்சத மோட்டார்களை நிறுவுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை கோயம்பேடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, சிஎம்டிஏ சார்பில் கோயம்பேடு காய்கறி அங்காடி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மினி கிளினிக் ஆகிய பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகராஜா சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சூல், மிஸ்ரா, மாநகராட்சி துணை ஆணையர் பிரவீன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கோயம்பேடு பகுதியில் செய்யப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டேன் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த பருவமழைக்குள் மழை நீர் வடிகால் பணி முழுவதுமாக கோயம்பேடு பகுதியில் அமைப்பதற்கு சாத்தியம் இல்லை எனவே பெருவள்ள காலத்தில் கோயம்பேடு பகுதியில் தேங்கும் நீரை வெளியேற்றுவதற்கு 60 எச்பி உயர்திறன் கொண்ட மோட்டார்கள் உடனடியாக நிறுவுவதற்கு உத்தரவிட்டு உள்ளேன்.
கோயம்பேடு காய்கறி விற்பனை மார்க்கெட்டில் மழைக்காலத்தில் தேங்கும் காய்கறி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த கூடுதலாக 20 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் காய்கறி கழிவுகள் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ரயில் விபத்து பகுதிகளில் உடனடியாக பொறுப்பு அமைச்சர் நாசர் மாவட்ட ஆட்சியர் காவல் துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு முதலமைச்சர் பணிகளை மேற்கொண்டு வரும் அதே வேளையில் சொந்த குடும்பத்தில் இழப்பு ஏற்பட்ட போதிலும் மக்களுக்கு பிரச்சனை என்றவுடன் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஓய்வின்றி களத்தில் துணை முதலமைச்சர் பணியாற்றி வருகிறார், இரண்டு நாட்களாக தனது மாமா இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் நேற்று இரவு ரயில் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் ஆய்வு சென்று இருக்கிறார். அவரது செயல் எங்களை போன்ற அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது” என்றார்.