கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும்- சேகர்பாபு
கிளாம்பாகத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடைவதோடு, பொது மக்களுக்குள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை முறையாக பராமரித்தும், சொத்துக்களை பாதுகாத்து நிர்வகிக்கும் பணிகளை செயல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செயல் அலுவலர் பணியிடங்களுக்கு 66 பேரும், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு 80 பேரும், தட்டச்சர்கள் பணிக்கு 100 பேரும், சுருக்கெழுத்து தட்டச்சர்களாக 32 பேரும் தேர்வு செய்யப்பட்டனர் . இவர்களின் செயல் அலுவலர் 6 பேருக்கு அடையாளமாக முதலமைச்சர் பணி நியமன ஆணையை ஏற்கனவே வழங்கி இருந்தார். இதை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் மீதமுள்ள 60 பேருக்கு அமைச்சர் சேகர்பாபு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்த ஆட்சி அமைந்ததற்கு பின்பாக இந்து சமய அறநிலைத்துறை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, மேலும் பணிகளை சிறப்பாக செய்வதற்காகத்தான் தொடர்ந்து காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொருத்தவரை சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக எப்போது திட்டமிடப்பட்டிருந்தாலும் இப்போது அதை செயல்படுத்தி வருகிறோம். மாதவரத்தில் இருந்து 135 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், 200 வழித்தடங்களிலிருந்து கிளம்பாக்கத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேவைப்பட்டால் கூடுதல் பேருந்து இயக்குவதற்கும் போக்குவரத்து துறை தயாராக இருக்கிறது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலமாக ரயில் நிலையம் அமைப்பதற்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் பணிகள் நிறைவடைய உள்ளது, ஸ்கைவாக் நடைபாதைக்கு 120 கோடி ரூபாய் அளவில் டெண்டர் கோரப்பட்டு இருக்கிறது. பிராட்வேயில் இருந்து கோயம்பேடுக்கு புறநகர் பேருந்து நிலையம் மாற்றப்பட்டபோது முழுமையான செயல்பாட்டுக்கு வருவதற்கு 7 ஆண்டுகள் வரை ஆனது. ஆனால் கிளாம்பாக்கத்தில் ஒரு மாதத்திற்குள் அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வு விரைவில் காணப்படும்” என்றார்.