புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறக்க வேண்டும் - அமைச்சர் சேகர் பாபு

 
sekar babu

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். 

இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆகையால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்த மத்திய அரசு ,ராஜபாதை சீரமைப்பு , துணை  குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் உள்ளிட்டவை அடங்கிய அடங்கிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டியுள்ளது. சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக  கட்டப்பட்டு வரும், இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.  இந்த நிலையில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.  இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக அறிவித்துள்ளது. இதேபோல்   திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட 19 கட்சிகள் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: கலைஞர் காலத்தில் இருந்தே ஒன்றிய அரசை பொறுத்தவரையில் உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தில் தான் இயங்கி வருகின்றோம்.  டெல்லியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற திறப்புவிழாவில் ஜனாதிபதியை வைத்து தான் திறக்கவேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. நாட்டில் உயரிய பதவியில் இருக்கின்றவரே கட்டிடத்தை திறந்துவைப்பதே ஏற்புடையதாக இருக்கும் என்பது முதல் அமைச்சரின் நிலைப்பாடு. இவ்வாறு  கூறினார்.