சனாதனத்தை எதிர்க்கவில்லை, அதில் உள்ள சில கொள்கைகளை தான் எதிர்க்கிறோம் - அமைச்சர் சேகர்பாபு

 
அமைச்சர் சேகர் பாபு

சனாதன தர்மத்தை எதிர்க்கவில்லை அதில் உள்ள சில கொள்கைகளை தான் எதிர்க்கிறோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். 

சேலத்தில் உள்ள புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் வருகிற அக்டோபர் மாதம் 27ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணி பணிகளை இன்று ஆய்வு செய்தார். மேலும் குடமுழுக்கு விழாவிற்கான முன்னேற்பாடுகளையும் பார்வையிட்டார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அனைத்து மதத்திற்குமான ஆட்சி நடைபெற்று வருவதாக கூறினார். எந்த வகையிலும் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதில்லை என கூறினார். இறை நம்பிக்கை உள்ளவர்களையும் ஆதரிப்போம், இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் ஆதரிப்போம் என்பதே எங்கள் கோட்பாடு என கூறினார். சனாதன தர்மத்தை எதிர்க்கவில்லை, அதில் உள்ள சில கொள்கைகளை தான் எதிர்க்கிறோம் எனவும் கூறினார்.