வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் - அமைச்சர் தகவல்

 
sekar babu

வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் கட்டுவது என கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமான பணிக்காக 393.74 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.  தினந்தோறும் ஒன்றரை லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் இந்த புதிய பேருந்து நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 209 பேருந்துகள், 270 கார்கள் மற்றும் 3 ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  பயணிகள் காத்திருக்கும் இடம், தங்குமிடம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள், மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. எஞ்சிய சில பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் தா.மோ. அன்பரசன் இன்று நேரில் ஆய்வு செய்தனர். புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.