28,102 புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

 
Thamo Anbarasan

தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.770 கோடி மானியத்துடன், ரூ.2,134 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 28,102 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் (07.09.2023) இன்று சிட்கோ தலைமை அலுவலக கூட்ட அரங்கில் தொழில் வணிக ஆணையரகத்தின் செயல்படுத்தப்படும் மேற்கொள்ளப்பட்டது. அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ரூ.770 கோடியே மானியத்துடன், ரூ.2,134 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு. 28,102 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.


நடப்பு ஆண்டு மாவட்ட தொழில் மைய அலுவலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை அடைய வேண்டும். அதே வேளையில், மகளிர், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர். பழங்குடியினர், சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்தவர்களும், தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். மாண்புமிகு முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் பொது மேலாளர்கள் தனி கவனம் செலுத்தி, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் அடித்தட்டு மக்களை தொழில்முனைவோர்களாக மாற்ற முழு முயற்சியுடன் பணிபுரிய வேண்டும்.மேலும் துறையால் செயல்படுத்தப்படும் முதலீட்டு மானியம், ஊதிய பட்டியல் மானியம், பின் முனை வட்டி மானியம் போன்ற 10 வகை மானியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றினை குறித்த காலத்தில் எந்த காலதாமதமும் இன்றி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இந்த திட்டங்கள் குறித்து புதிய தொழில்முனைவோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட வேண்டும். உணவு பதப்படுத்தும் தொழிலை அடிப்படையாக கொண்ட பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டத்தை வேளாண் தொழில் சார்ந்த மாவட்டங்களில் முழு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் அளிக்கும் வகையில் அவர்களையும் தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கும், விவசாயிகளுக்கும், MSME தொழில் நிறுவனங்களுக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு இத்திட்டத்தை முழுமையான அளவில் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்திட வேண்டும்.மாண்புமிகு முதல்வர் அவர்களின் சமச்சீர் பொருளாதாரத்தினை செயல்படுத்துவதில் MSME நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. அதனை செயல்படுத்தும் விதமாக MSME நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்கள் மற்றும் கடனுதவிகளை உரிய நேரத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.