நகரி தொகுதியில் அமைச்சர் நடிகை ரோஜா வேட்பு மனுத்தாக்கல்..!

 
1

ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரும் மே 13ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று முதல் வேட்புமனு தாக்கல் ெதாடங்கியது. முதல்நாளில் சட்டப்பேரவைக்கு 236 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவைக்கு 46 வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2ம் நாளான நேற்றும் மனு தாக்கல் நடந்தது. 25ம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்ய அவகாசம் உள்ள நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் 25ம் தேதி புலிவெந்துலாவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

 

ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணும் வரும் 23ம் தேதி பிதாபுரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். சந்திரபாபு தரப்பில் குப்பம் தொகுதிக்கு அவரது மனைவி புவனேஸ்வரி குப்பத்தில் உள்ள வரதராஜ சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்து பேரணியாக சென்று வேட்புமனுதாக்கல் செய்தார். லோகேஷ் தரப்பில் மங்களகிரியில் தெலுங்கு தேச கூட்டணி கட்சியினருடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு எதிர்க்கட்சி தலைவராக உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக பிராமண பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவரது சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. சந்திரபாபு மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரிக்கு ₹931 கோடி சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தபோது அளிக்கப்பட்ட பிரமாணப்பத்திரத்தின்படி சந்திரபாபு மற்றும் புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ₹668 கோடியாக இருந்தது.

 

கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள நிலையில் சந்திரபாபு சொத்து மதிப்பு மேலும் ₹263 கோடி உயர்ந்து ₹931 கோடியாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ், நிர்வாக செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களில் முதலீடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர புவனேஷ்வரியிடம் ₹3 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி உள்ளது. அசையா சொத்துகளாக ஐதராபாத், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் விவசாய பண்ணைகள் உள்ளதாகவும், வழக்குகளை பொறுத்தவரை சந்திரபாபு மீது 24 வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நகரி தொகுதியில் அமைச்சர் நடிகை ரோஜா வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆந்திராவில் 2வது நாளாக மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிக்கு 53 வேட்பாளர்கள் 68 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதேபோல் 175 சட்டப்பேரவை தொகுதிக்கு 314 வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்தனர்.