“மதுரை குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது; லட்சகணக்கான பக்தர்கள் மன நிறைவுடன் சாமி தரிசனம்”- அமைச்சர் ரமேஷ்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், உலகத் தமிழர்களின் பெருமையாகத் திகழும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றதாக அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், உலகத் தமிழர்களின் பெருமையாகத் திகழும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.லட்சகணக்கான பக்தர்களும், அனைத்துத் தரப்பு மக்களும் மனநிறைவுடன் பங்கேற்று, இறைவனை தரிசித்து மகிழ்ந்து வருகின்றனர் என்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருப்பணியை சிறப்பாக நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அனைத்து துறை அலுவலர்கள், அறங்காவலர்கள், திருப்பணிக்கு பங்களித்த நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஒரு வாரமாக தமிழ் பக்திப் பதிகங்களை இசைத்து, ஒவ்வொரு கோபுரத்தின் உச்சியிலும் தமிழின் இனிமையை முழங்கச் செய்து, குடமுழுக்கு விழாவில் சிறப்பாகப் பங்கேற்ற ஓதுவார்கள் மற்றும் சைவ ஆதீனங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.வரலாற்றுப் பெருமைமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக நிறைவேறியது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.இறையருளால் அனைவரது வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி, வளம் பெருகட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

