செல்போனை பாதுகாக்க ரூ. 5 கட்டணம் ஏன்? - அமைச்சர் ரமேஷ் விளக்கம்

 
ரமேஷ்

எதிர்காலத்தில் நடுத்தர, சிறிய கோயில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும்  என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டின் முக்கியமான திருக்கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்லத் தடை விதித்து, பாதுகாப்பாக ஒப்படைக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். இது தவெக எடுத்த முடிவு அல்ல, 02.12.2022 அன்றே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இதுகுறித்து முக்கியமான உத்தரவை பிறப்பித்தது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மொபைல் போன்களின் பயன்பாட்டை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், கோயிலின் புனிதத்தன்மை, ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. கோயிலின் புனிதத்தன்மை, பக்தர்களின் கவனம், கோயில் பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாக்க 2022-லேயே நீதிமன்றம் கூறிய உத்தரவை தற்போது நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையே இது. முதற்கட்டமாக 52 முதுநிலை கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் நடுத்தர, சிறிய கோயில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும் எனக் கூறியுள்ள அமைச்சர் ரமேஷ், சிறிய கோயில்களில் அதன் வருவாயில் இருந்து மட்டும் செல்போன் பாதுகாப்பு செலவை மேற்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரே மாதிரியாக ரூ.5 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.