"தொடர் தோல்விகளால் இபிஎஸ் நிம்மதி இழந்துள்ளார்"- அமைச்சர் ரமேஷ்
தொடர் தோல்விகளால் இபிஎஸ் நிம்மதி இழந்துள்ளார். மக்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள் என அமைச்சர் ரமேஷ் கூறினார்.

திருச்சியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், "தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு முந்தைய திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட சூழலே காரணம். திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட சூழலை சரிசெய்வதற்கு தவெக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஒரு குடும்பம் வாழ ஒட்டுமொத்தக் கட்சியும் வேலை செஞ்சுதுனா அது திமுக மட்டும் தான்.
தமிழக அரசையும் முதல்வர் விஜய்யையும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொடர்ந்து குறை சொல்லி வருகிறார். அவர் தலைமையில் அதிமுக 10 தோல்வி 11 தோல்வி என இன்றைக்கு 13 வது தோல்வியை தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. அவர் நிம்மதி இல்லாமல் இருப்பது எதார்த்தம் தான். திமுக ஒரு ஊழல் கட்சி. மக்கள் வரிப்பணத்தை சுரண்டியுள்ளனர். ஒரே ஒரு குடும்பம் வாழ்வதற்காக, மக்கள் பணத்தை சுரண்டுவதற்காக மொத்த கட்சியும் வேலை பார்த்துள்ளனர். மக்கள் பணத்தை சுரண்டியவர்களுக்கு என்ன தண்டனை பெற்று கொடுக்க முடியுமோ அதைச் செய்வோம். அதற்கான முயற்சியில் தவெக அரசு ஈடுபட்டு கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை தற்போது புதிதாக முளைத்து விடவில்லை. திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு குளறுபடிகளை கடந்த நான்கு மாதங்களாக நாங்கள் சரி செய்து வருகிறோம்" என்றார்.

