“ஓடி, ஒளியவில்லை என சொல்லிட்டு எங்க காணாமல் போனீங்க? தைரியம் இருந்தால் வந்து நிற்கலாமே”- செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி
வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு வெற்றி பெற முயலுங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “சீமான் வெறுப்பு அரசியலை விதைக்கிறார். பயிற்சி செய்கிறோம், பயிற்சி செய்கிறோம் என்று தொடர்ந்து 15 ஆண்டுகளாக பயிற்சி மட்டுமே செய்து கொண்டே இருக்கிறார். வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு வெற்றி பெறுவதற்காக பேசினால் உள்ளாட்சி தேர்தலில் ஒன்று இரண்டு இடங்களில் வெல்வதற்கான வாய்ப்பு கூட கிடைக்கும். கடந்த ஆட்சியில் அறநிலையத்துறையில் நடந்த ஊழல்கள் பற்றி விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும். கோயில் சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளது, கோயில் சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். யாரெல்லாம் அதில் இடம்பெற்றிருக்கிறார்கள் என விசாரணை செய்துவருகிறோம்.
செந்தில் பாலாஜி ஓடி ஒளியலனு சொல்லிட்டு இத்தனை நாட்கள் எங்கு காணாமல் போனார்? தினமும் காவல்நிலையத்தில் ஆஜாராக வேண்டியதுதானே... நீதிமன்றம் சொல்லும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டியதுதானே. செந்தில் பாலாஜிக்கு தைரியம் இருந்தால் வந்து நிற்கலாமே! உண்மையிலேயே தவறு இல்லையென்றால் களத்தில்வந்து சந்திக்க வேண்டியதுதானே... நிச்சயமாக ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். உண்மையில் தனித்து விடப்பட்டுள்ளவர் யார் என ஸ்டாலினுக்கு தெரியும்.. சட்டமன்ற நிகழ்வுகளை வீட்டில் இருந்து டிவியில் பார்க்கும் நிலைக்கு ஸ்டாலின் தனித்து விடப்பட்டுள்ளார்” என்றார்.

