"நாங்க இருக்குறதே வாடகை வீடு தான்... ரூ.2 கோடி பணமே எங்ககிட்ட இல்ல"- அமைச்சர் ரமேஷ்
பழனி நில விவகாரத்தை பொறுத்தவரை மிகவும் தீவிரமாக விசாரணை நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “பழனி நில விவகாரத்தை பொறுத்தவரை மிகவும் தீவிரமாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. முதலமைச்சரிடம் இந்த விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் தான் சொன்னேன். உடனே அவர் இந்த சம்பவத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றினார்.
சம்பந்தப்பட்ட பதிவுத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதில் சிக்குபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நம்முடைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படும். திடீரென அதிமுக ஐடி விங்கில் இருப்பவர்கள், அமைச்சர் ரமேஷின் உறவினர்கள்தான் 100 கோடி ரூபாய் நிலத்தை 2 கோடிக்கு பதிவு செய்து மோசடி செய்ததாக கூறுகிறார். சார் முதல்ல என் குடும்பத்துல இருக்க யார் கிட்டயுமே 2 கோடி ரூபாய் அளவுக்கு பணமே கிடையாது.. அதுதான் உண்மை. அப்படியே அந்த சொத்தை வாங்கினாலும் சென்னையில் வாங்காமல் நாங்க ஏன் பழனில போய் வாங்கனும்..? நாங்க இருக்குறதே வாடகை வீடு தான்.. எதாச்சும் ஒரு காரணத்தை வைத்து என்னுடைய பெயரையும், புகழையும் கெடுக்க வேண்டுமென இப்படி பொய்யை பரப்புகின்றனர். இந்த சீப்பு திருடுற வேலையை எல்லாம் பண்ணிட்டு இருக்காதீங்க.. ஸ்ரீரங்கத்தில் ஒரு கோபுரத்தின் பணி ரொம்ப நாட்களாக நடந்துகொண்டிருக்கிறது. கட்டுமான பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் சாலை முடங்கியிருக்கிறது. இதுகுறித்து மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். கள்ளும் முள்ளும், ஆணிகள் உள்ளிட்டவை அந்த இடத்தில் உள்ளன. ஸ்ரீரங்கம் கோயிலில் நீண்ட காலமாக கோபுர சீரமைப்பு பணிகள் நடப்பதால், ஆணிகள் விழுந்திருக்கலாம் என்பதால், அங்கு ஊழியர்கள் கூறியதன்படி நான் காலணி அணிந்து சென்றேன். பகுத்தறிவு இல்லாதவர்கள்தான் இது போன்ற சர்ச்சையை கிளப்பி விடுகின்றனர். அங்கிருக்கும் தொழிலாளர்களும் பாதுகாப்பு நடவடிக்கையாக செருப்பு அணிந்துகொண்டு பணியாற்றுகிறார்கள்” என்றார்.

