மின்சாரம் இல்லாத குடும்பங்களுக்கு இனி மாதம் 4 லிட்டர் மண்ணெண்ணெய்

 
மண்ணெண்ணெய்

பிரிவு 17 நிலத்தில் மின்சாரம் இல்லாத 12 ஆயிரம் குடும்பங்களுக்கு விரைவில் மாதம் 1 லிட்டர் மண்ணெண்ணெய்யில் இருந்து 4 லிட்டராக  வழக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் க. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம்  கூடலூரில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பத்தாவது வாசனை திரவிய கண்காட்சி துவங்கியது. இதனைதமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்பரித் துவங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ உச்சநீதிமன்றத்தில் வழக்கில் உள்ள பிரிவு 17 நிலத்தில் தற்போது வரை மின்சாரம் இல்லாமல் 12 ஆயிரம் குடும்பங்கள் தவித்து வருகின்றனர். அவர்கள் வனப்பகுதியை ஒட்டி வாழ்ந்து வருவதால் இதுவரை அவர்களுக்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வரிடம்  இது பற்றி விளக்கி கூறியுள்ளேன். விரைவில் சமவெளி பகுதியில் கொடுக்க வேண்டிய  24 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் உயர்த்தி தற்போது அந்த 12 ஆயிரம் குடும்பங்களுக்கு மாதம் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு லிட்டரில் இருந்து 4 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

மண்ணெண்ணெய் என்பது மத்திய அரசிடம்  பணம் கொடுத்து மட்டுமே வாங்கப்படுகிறாது. அவ்வாறு பணம் கொடுத்தாலும் மத்திய அரசு மண்ணெண்ணெய் குறைவாகவே வழங்குகிறது. எனவே மலைப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஓரிரு வாரங்களில் நாலு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.