”காதுகுத்து.. காதுகுத்து.. நீட் ரகசியம் எனக்கு தெரியும்னு 5 வருஷமா சொன்னது தான் பெரிய காதுகுத்து”- உதயநிதியை பந்தாடிய ராஜ்மோகன்
திட்டங்களுக்கு கட்டுபாடு விதிக்கும் தவெக அரசுக்கு, ‘தாய் மாமன் காது குத்தும் திட்டம்’ என மொத்தமாகப் பெயரிடலாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தொியும் என்று உதயநிதி கூறியதுதான் மிகப்பொிய காதுகுத்து. மெரினா கடற்கரைக்கு பூட்டு போட்டதில் கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க. அரசு ‘முனைவர் பட்டம்' பெற்றுள்ளது. தற்போது ஆளுங்கட்சி மற்றும் அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை செயல்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றால் மகளிர் காவல்துறையிடம் செல்லலாம்..! ஆனால் கடந்த தி.மு.க ஆட்சியில் விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் பெண் காவல் துறை அதிகாரியிடமே சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார் தி.மு.க உறுப்பினர்.. அவர்களுக்கே பாதுகாப்பில்லாத ஒரு ஆட்சியை நடத்திவிட்டு எங்களை பார்த்து பேசுவதா..? எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், குற்றவாளிகள் மீது விஜய் அரசு நடவடிக்கை எடுக்கும். சட்டம் - ஒழுங்கில் சிறப்பான இடத்தை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது. அரசியல் தலையீடு இல்லாத நிர்வாகம், ஆளுங்கட்சி தலையீடு இல்லாத காவல்துறை, எந்தக் கட்சியினர் குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் 'விஜய் சர்கார்’ தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் பெண்ணின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர் முதற்கொண்டு அனைத்தையும் முதல் தகவல் அறிக்கையில் வெளியிட்டு மிகப்பெரிய தவறை செய்தது திமுக அரசு” என்றார்.

