"இருமொழிக் கொள்கை என்பதில் உறுதி" - அமைச்சர் ராஜ்மோகன்
புழல் சிறையில் இருக்கும் ஒரு கைதி கூட சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார். என் பள்ளிக்கூடத்தில் உள்ள பசங்க சிக்கன் பிரியாணி சாப்பிடக் கூடாதா? என்ற எண்ணமும் ஆசையும் முதலமைச்சருக்கு உள்ளது என பள்ளி மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்குவது குறித்த கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி விரிவுப்படுத்தப்படவுள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரு புதிய சரித்திரம் பிறக்கிறது. காமராசர் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்குகிறது. ஒரே நேரத்தில் 38 மாவட்டங்களிலும் முதலமைச்சர் விஜய் தொடங்கிவைப்பார். காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தால் 34.64 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். காலை உணவுத் திட்டத்தில் புதிய உணவு வகைகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். புழல் சிறையில் இருக்கும் சிறை கைதி கூட சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார். நமது பள்ளி குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு உள்ளது. வரும் காலத்தில் நிச்சயமாக பள்ளி குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும். இருமொழி கொள்கை என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.ஏற்கனவே 19 லட்சத்துக்கு மேற்பட்ட மாணாக்கர் பயன்பெறும் நிலையில் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். ” என்றார்.

