“தமிழக பெண்களின் பாதுகாப்பு மீது முதல்வர் விஜயின் முழு கவனமும் இருக்கும்”- அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ்நாட்டு பெண்கள் பாதுகாப்பு மீது முதல்வர் விஜயின் முழு கவனமும் இருக்கும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “சட்டமன்ற மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்துடன் அவையை தொடங்குவதும், தேசிய கீதத்துடன் நிறைவு செய்வதும் வழக்கம். ஆனால் தேசிய கீதத்தை அவையின் தொடக்க நிகழ்வில் பாடக் கூடாது என்று எந்தவொரு தடையும் இல்லை. தமிழ்நாட்டு பெண்கள் பாதுகாப்பு மீது முதல்வர் விஜயின் முழு கவனமும் இருக்கும். தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு துரிதமாகக் கண்காணிக்கப்படுகிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றினார் முதல்வர் விஜய். 2-3 ஆண்டுகளாக இருட்டடிப்பு செயல்பட்ட சட்டமன்ற நேரலை மீண்டும் தொடங்கியுள்ளது. இனி சட்டமன்ற நேரலை தொடரும். அரசின் இந்த வெளிப்படையான நடவடிக்கையானது, சட்டமன்ற விவாதங்களை மக்கள் உடனுக்குடன் முழுமையாக தெரிந்துகொள்ள வழிவகை செய்யும்.
கல்வி நிதியை மத்திய அரசிடம் பேசி வாங்குவோம். சட்டப்பேரவையில் வெறுமென கூச்சலிட மாட்டோம். மக்களுக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களை செயல்படுத்துவோம். தமிழே தவெக அரசின் மூச்சு. மத்திய அரசின் வந்தே மாதரம் சுற்றறிக்கையைப் பின்பற்றாமல், சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துகே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு குற்றங்கள் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அதிகம் முன்வருகின்றனர். வாயை திறங்க CM என்று கடந்த ஆட்சியில்தான் பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும்” என்றார்.

