“திமுக அதிமுக இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் விஜய்”- அமைச்சர் ராஜ்குமார்
திமுக அதிமுக இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் விஜய் என வீட்டு வசதி துறை அமைச்சர் ராஜ்குமார் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய வீட்டு வசதி துறை அமைச்சர் ராஜ்குமார், “தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக தான் மாறி மாறி ஆட்சி செய்து வந்தார்கள். 2 பேரும் எத்தனை ஆண்டுகளுக்கு தான் இப்படியே போட்டிப்போட்டு கொண்டிருப்பீர்கள். வாருங்கள் இனி ஒற்றுமையாக ஒரே பக்கத்தில் அமரலாம் என சொல்லி இரு கட்சிகளையும் அருகருகே அமரவைத்த பெருமை முதலமைச்சர் விஜயை சாரும். முன்பை விட 2 கட்சியினரும் ஒற்றுமையாக சிரித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.கவைகயும் அ.தி.மு.கவையும் ஒரே பக்கத்தில் அருகருகே அமர வைத்த பெருமை எங்க முதலமைச்சரையே சாரும். இந்த ஒற்றுமை தொடர்ந்து நீடிக்கட்டும். இதுவே விஜய்யின் முதல் சாதனை. திமுக, அதிமுக இருவரும் ஒருவர் ஆளுங்கட்சி என்றால் மற்றவர் எதிர்க்கட்சி, ஒருவர் இந்த பக்கம் அமர்ந்தால் மற்றவர்கள் அந்த பக்கம் அமர்வார்கள். இப்படி மாறி மாறி ஆட்சி செய்தவர்களுக்கு 2026ஆம் ஆண்டு தமிழக மக்கள், முதல்வர் விஜய் வாயிலாக ஒரு புதிய தீர்ப்பை எழுதியுள்ளார்கள்.
கடந்த காலத்தில் இருந்த குறைகளை மட்டும் பட்டியலிட்டுக் கொண்டிருப்பதற்காக மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தவில்லை. அந்தக் குறைகளைச் சரிசெய்து, தமிழ்நாட்டின் எதிர்காலத்தைச் செதுக்குவதற்கான பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இவர்கள் புதியவர்கள் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சிலர் கூறுகிறார்கள். ஆம், நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு புதியவர்கள் தான். ஆனால், மக்களின் பிரச்சினைகள் எங்களுக்குப் புதியவை அல்ல.மக்களோடு வாழ்ந்தவர்கள். மக்களின் தேவைகளை அறிந்தவர்கள். we are new, but we are quick learners... 59 ஆண்டுகளுக்குப் பிறகும், தரமான பள்ளி, மருத்துவம், குடிநீர், சாலை, பாசனம் என அடிப்படை வசதிகளைப் பற்றித்தான் இன்றும் சட்டப்பேரவையில் விவாதிக்கிறோம். மக்கள் மனதில் இயல்பாக எழும் கேள்வி ஒன்றே ஒன்று தான். இத்தனை ஆண்டுகளாக இவர்கள் என்ன செய்தார்கள்? கடந்த 59 ஆண்டுகள் என்பது சாதாரண காலம் அல்ல. இரண்டு தலைமுறைகளின் காலம். இரு பெரும் கட்சிகள் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாடு வளரவே இல்லை என்று நாம் கூறவில்லை.தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை மறுப்பது அரசியல் நாகரிகம் அல்ல.” என்றார்.

