"திமுக தங்களுக்காக மட்டும் போராடவில்லை, அதிமுகவுக்காகவும் போராடி வெற்றி பெற்றுள்ளது"- அமைச்சர் ரகுபதி

 
ரகுபதி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயருக்காக மட்டுமல்ல, அதிமுகவின் தலைவர் ஜெயலலிதாவின் பெயருக்காகவும் வாதாடிய இயக்கம் தான் திமுக, அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு உச்ச நீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது வரவேற்கத்தக்கது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

ரகுபதி

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ ராஜவீதி அருகாமையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து திமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் கருப்பு சட்டை கருப்பு பேட்ஜ் அணிந்து புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்திற்கு மௌன ஊர்வலமாக சென்று அங்கு உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த ஊர்வலத்தின் போது கலைஞர் கருணாநிதிக்கு உரிய பாடலை ஒளிர விட்டு சென்றனர். 

அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, “உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. அதிமுக ஆட்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி படம் போடப்பட்டது. மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்தார்கள். அந்த சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீண்டும் நாங்கள் அந்த சட்ட மசோதாவை கொண்டு வந்தபோது ஆளுநர் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பினார். அதற்கு சேர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் கலைஞருக்காக மட்டுமல்ல, மற்ற நிர்வாகிகளுக்காக மட்டுமல்ல அவர்களது தலைவர் ஜெயலலிதாவிற்கும் சேர்த்து அவரது பெயரை வைக்க வேண்டும் என்று வாதாடி பெற்றிருக்கின்ற இயக்கம் தான் திமுக. எங்களுக்கு கட்சி வேறுபாடு கிடையாது. எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களுடைய முதலமைச்சர் பெயரை சூட்ட வேண்டுமோ அந்த பெயரை சூட்ட கடமைப்பட்டுள்ளோம். அதையெல்லாம் விமர்சித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அது வரவேற்கத்தக்க ஒன்று.

பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் மோடியால் வளர்ச்சி விகிதத்தை எட்ட முடிந்ததா? இல்லை... எங்கள் தலைவர் மு க ஸ்டாலின் ஆட்சியில் தான் தமிழ்நாடு இந்த வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளோம். இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுடைய உழைப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எடுத்திருக்கின்ற உழைப்பு அவரது முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் வெற்றி. திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் திறப்பதற்கு ஆளுநருக்கு அனுப்பிய சட்ட மசோதாவை அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார் குடியரசுத் தலைவர் என்ன பதிலளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு எதிர்க்கட்சி சட்டம், ஒழுங்கு நல்லா இருக்கின்றது என்று சான்றிதழ் கொடுக்க மாட்டார்கள். நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அந்த சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. மக்கள் எங்களுக்கு சான்றிதழ் தரவேண்டும். அந்த மக்கள் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம், வளமாக இருக்கின்றோம். நலமாக இருக்கின்றோம் என்று மக்கள் எங்களது தலைவர் மு க ஸ்டாலினுக்கு சான்றிதழ் தருகின்றனர். அந்த சான்றிதழ் எங்களுக்கு போதும் எடப்பாடி பழனிச்சாமி சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம். 

ரகுபதி

திருப்பூரில் அவர்களது குடும்பத்திற்குள் நடந்த சண்டையை விசாரிக்க போகும்போது நடந்த சம்பவம் தான் எஸ்எஸ்ஐ கொலை. அந்த சம்பவம் நடைபெறும் பொழுது குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள், அதைத்தான் ஒரு அரசு செய்ய முடியும். யாரையும் குற்றம் செய்ய விடாமல் தடுப்பதற்கு அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க கூடிய எக்ஸ்ரே கருவி யாரிடமும் இல்லை. தவறு நடந்து விட்டால் அந்த தவறை உடனே கண்டுபிடித்து அந்த தவறை செய்த குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர ஒரே அரசு இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலமைச்சருடைய அரசுதான். எஸ்எஸ ஐ கொலை வழக்கில் காவல்துறையினரை தாக்கி விட்டு தப்ப முயன்றால் என்கவுண்டர் தானே செய்ய வேண்டும். தப்ப முயன்ற போது சுட்டு பிடிப்பது அவசியமானதாக இருந்தால் அதனை தவிர்க்க முடியாது.  அந்த நேரத்தில்தான் அந்த சம்பவம் நடந்துள்ளது. சாதாரணமாக தப்பி சென்று இருந்தால் காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடித்து இருப்பார்கள், காவல்துறையினரை தாக்கி விட்டு சென்றதால் தான் இந்த என்கவுண்டர் சம்பவம் நடந்துள்ளது” என்றார்.