திமுக கூட்டணியில் விரிசலா? - அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
அண்ணாவையும் பெரியாரையும் யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது அவரவர்களுடைய உரிமை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “நாங்கள் மக்களிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், மக்களை நம்புகிறவர்கள். மக்களுக்கான பணிகளை செய்துள்ள இயக்கம் திமுக, எத்தனை அரசியல் கட்சிகள் வேண்டும் என்றாலும் தமிழ்நாட்டில் வரலாம் போட்டிகளை தவிர்க்க முடியாது. வரவேண்டும். திமுக என்கின்ற மாபெரும் இயக்கத்தை கடந்த பல ஆண்டுகளாக சிறப்போடு நடத்துகின்றவர் மு.க. ஸ்டாலின் மக்களுக்காக செய்யக்கூடிய சேவைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடிய வாய்ப்பு திமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும்தான் உள்ளது, வேறு யாருக்கும் இல்லை. நாணயம் வெளியீடு என்பது ஒன்றிய அரசு வெளியிட வேண்டிய நாணயம். ஒன்றிய அரசாங்கம் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு நாணயம் வெளியிட்டது.
தலைமைச் செயலாளர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை முதன்மைச் செயலாளராக இருந்தவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மரியாதை நிமித்தமாக அவர் ஆளுநரை சந்திக்க வேண்டும். அதனால் அவர்கள் சந்தித்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு வேற ஒன்றும் இல்லை. வியூகங்களுக்கும் கற்பனைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அவர் பதவியில் தொடர்வது குறித்து ஒன்றிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படாது ஏற்படும் விடமாட்டோம். அவர்களும் விரிசல் ஏற்பட வாய்ப்பை விட மாட்டார்கள். கூட்டணியில் விரிசல் வரும் என்று பகல் கனவை கண்டு கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக யாருடைய கனவு நிறைவேறாது. தலைவர் மு.க.ஸ்டாலினோடு கூட்டணியை சேர்ந்தவர்கள் ஒற்றுமையோடு என்றைக்கும் பயணிப்பார்கள். திமுக எப்போதுமே ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும். 234 எங்களது லட்சியம். 234 முழுவதும் வெல்வது என்பது முடியாத காரியம் ஆனால் 200 என்பது இலக்கு. எப்போதும் தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு இலக்கை நிர்ணயித்தால் அதில் வெற்றி பெறுவார் எந்த சந்தேகமும் கிடையாது. 200 என்பது எங்களது இலக்கு. அதை அடைவது நிச்சயம்.
திமுகவுக்கு போட்டியாக யாரும் வர முடியாது. திமுக 75வது பவள விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இயக்கம். தமிழ் மண்ணில் தமிழர்களுக்காக இயங்கக்கூடிய ஒரு இயக்கம் திமுக. விஜய் திராவிட கட்சிகளை நோக்கி வருகிறார் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. யார் வேண்டுமென்றாலும் அண்ணாவையும் பெரியாரையும் யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது அவரவர்களுடைய உரிமை. ஆனால் தங்களைப் பொறுத்தவரை அண்ணா, பெரியார், கலைஞர், கருணாநிதி ஆகியோர் திமுகவுக்கு சொந்தக்காரர்கள்.
பாலியல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகியும் அவரது தந்தையும் உயிரிழந்த இரு வேறு சம்பவங்களை ஒன்றாக முடித்து போட்டு பார்க்கிறார்கள். ஆனால் அது வேறு சம்பவம் இது வேறு சம்பவம். இதில் ஆளும் கட்சி எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் மருத்துவமனையில் இருந்து உள்ளார். அவர் கைதாவதற்கு முன்பாகவே விஷம் சாப்பிட்டுள்ளார் என்ற குறிப்பு உள்ளது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இன்னொருவர் ஸ்கூட்டர் விபத்தில் இறந்துள்ளார். இரண்டும் வெவ்வேறு.. ஆனால் இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முடித்து போட்டு பார்க்கிறார்கள். இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் போடுகின்ற முடித்து தான்.
எங்களைப் பொருத்தவரை எந்த குற்றவாளையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை தண்டிக்கின்ற முதல் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான். எங்கள் கட்சியில் குற்றவாளிகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம் தெரிந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கக்கூடிய இயக்கம் திமுக. முருகன் மாநாடு பக்தி மாநாடு நீங்கள் எல்லாம் விரும்புகின்ற மாநாடாக அமைச்சர் சேகர்பாபு தொடங்கியுள்ளார்” என்று தெரிவித்தார்.