ஆளுநர் அரசியல்வாதியாக மாறி பா.ஜ.க வின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார்- அமைச்சர் ரகுபதி

 
ரகுபதி பொதுக்கூட்டத்தில் பேச்சு

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியாக மாறி பா.ஜ.க வின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ரகுபதி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள  சிறை காவலர்களுக்கான பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குனர் மஹேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 8 பெண் காவலர்கள் உட்பட 140 காவலர்கள் பயிற்சி முடித்தனர். பயிற்சி முடித்த 140 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. காவலர்களின் அணிவகுப்பும் நடத்தப்பட்டது. அணிவகுப்பு மரியாதை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து சிறை காவலர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “இந்தியாவிலேயே சிறைத்துறையை நிர்வகிக்கும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. சிறைவாசிகள் இல்லவாசிகளாக கருதி அவர்களுக்கு சிறப்பான உணவு, நூலகம், சிறைக்குள்ளேயே வேலை வாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. சிறையை தண்டிக்கும் இடமாக இல்லாமல் ஒருவரை திருத்தும் இடமாக இருக்க வேண்டும் என்கிற முதலமைச்சர் எண்ணத்தை நிறைவேற்றி வருகிறோம். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை அரசு அவர்களுக்கான பாஸ்போர்ட் வழங்கவில்லை. அதை பெற்று தருவதற்கு உரிய முயற்சியை எடுத்து வருகிறோம். அரசு அவர்களை கைதியாக நடத்தவில்லை. ஆளுநர் ஆளுநராக இருக்காமல் அரசியல்வாதிகளாக மாறும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியாக மாறும் போக்கை தான் கடைபிடித்து வருகிறார்.  நேற்று நாகை சென்ற ஆளுநர் அங்கு வீடுகள் கட்டுவதில் தவறு நடந்துள்ளது என பொதுவாக கூறுகிறார். குறிப்பிட்டு என்ன தவறு என கூறினால் அவர்கள் மீது நடவடிக்கை நிச்சயம் எடுப்போம். பா.ஜ.க வின் ஊதுகுழல் போல் தான் ஆளுநர் பேசி வருகிறார். அ.தி.மு.க என்கிற எதிர்க்கட்சி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. பா.ஜ.க என்கிற எதிர்க்கட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் செயலிழந்துள்ளதால் ஆளுநர் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக பல கருத்துக்களை பேசி வருகிறார். எதிர்கட்சிகள் பலம் இழந்து விட்டதை ஆளுநரின் செயல்பாடுகள் உறுதிப்படுத்துகிறது” என்றார்.