ராவணனை ராமன் வென்றது போல்...மோடியை மு.க.ஸ்டாலின் வெல்வார் - அமைச்சர் ரகுபதி

ராமாயணத்தில் பத்து தலை கொண்ட ராவணனை ஒரு தலை கொண்ட ராமன் வென்றது போல், அசுர பலம் கொண்ட மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலுவான கூட்டணி அமைத்து வீழ்த்துவார் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதேபோல், மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டியில் பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது: மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் மிக்க தலைவராக தமிழக முதலமைச்சர் தான் திகழ்கிறார். ராமாயணத்தில் பத்து தலை உள்ள ராவணனை, ஒரே தலை உள்ள ராமன் வென்றது போல், பத்து தலை ராவணாக இருக்கக்கூடிய மத்திய அரசை முக. ஸ்டாலின் தலைமையில் அமையக்கூடிய கூட்டணி நிச்சயமாக வெற்றி கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். திமுக அரசு பல நன்மைகளை செய்துவருவதற்கெல்லாம் ஒன்றிய அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.