பாஜகவின் ‘சி’ டீம் விஜய் - அமைச்சர் ரகுபதி

 
ரகுபதி ரகுபதி

திமுகவை திட்டுவதற்காகவே பாஜகவின் மறைமுக ஆதரவோடு தொடங்கப்பட்ட கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம். பாஜகவின் சி டீம் விஜய் என்று முதன் முதலில் நான் தான் கூறினேன், இப்போதும் அதை தான் உறுதியாக கூறுகிறேன், பாஜகவின் சீ டீம் தான் விஜய் அவரை பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

ரகுபதி

புதுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரகுபதி, “அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகின்ற காரணத்தினால், பரிதாபத்திற்குரிய பழனிச்சாமி எங்கள் திட்டத்தை விமர்சித்துள்ளார். மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஆட்சியோட திட்டங்களே சான்று. அதனை எடப்பாடி பழனிச்சாமியால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. மகளிர் உரிமைத்தகையை எடப்பாடி பழனிச்சாமி தர நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருக்கும்போதே கொடுத்திருக்கலாம். தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார் செய்ய மாட்டார். ஆனால் நாங்கள் சொல்வோம் செய்வோம். எடப்பாடி பழனிச்சாமி நான்தான் முதலமைச்சர் என் தலைமையில் கூட்டணி என்கிறார். ஆனால் பாஜக தலைமை பேசி முடிவு செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். அங்கு முரண்பாடு அவ்வளவு உள்ளது. ஒரு குடும்பத்தில் துக்கம் நிகழ்ந்து விட்டது என்றால் அங்கு வருத்தம் தெரிவிப்பது மனிதாபிமானம், தன்னுடைய கட்சிக்காரர் தவறு செய்தாலும் தண்டனையை தரக்கூடிய முதலமைச்சர்தான் எங்கள் முதலமைச்சர். வெளி மாநிலங்களுக்கு இங்கிருந்து கொண்டு செல்லப்படும் இயற்கை வளங்களுக்கு முறையாக வரி விதிக்கப்பட்டு வரி ரசீது இருந்தால் மட்டுமே வெளி மாநிலங்களுக்கு வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகிறது, வரி ரசீது இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது

பாஜவின் சி டீம் விஜய் என்று முதன் முதலில் நான் தான் சொன்னேன். இப்போதும் நான் அதைத்தான் சொல்கிறேன். பாஜகவின் சி டீம் தான் விஜய், அவர்களைப் பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே பாஜக பின்னணியில் இருந்து ஆரம்பிக்கப்பட இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம். பாஜகவோடு மறைமுக கூட்டணி வைக்கக்கூடிய அவசியம் திமுகவிற்கு இல்லை. தூங்கிக் கொண்டே எடப்பாடி பழனிச்சாமி எதையாவது கூறிக்கொண்டு வருகிறார், அதற்கெல்லாம் நாங்கள் பதில் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.