“எங்களுக்கு கொடுக்க கூடாது என்ற எண்ணம் இல்லை”...10.5% இடஒதுக்கீடு குறித்து அமைச்சர் விளக்கம்

 
ரகுபதி

பாஜகவின் தோழமைக் கட்சியான பாமக, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், மத்திய அரசு புள்ளிவிவரங்களை அளித்தால் அடுத்த ஆறு மாதங்களில் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வருவோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பனையபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து அகத்தியர் வேடமிட்ட திமுக தொண்டர் ஒருவர் பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்திலும் அமைச்சர் ரகுபதி கலந்துக்கொண்டார். அதனை தொடர்ந்துசெய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “இட ஒதுக்கீடு கொடுக்க தமிழக அரசுக்கு முழு மனது உண்டு. தமிழக முதல்வர் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று உச்சநீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞர்களை வைத்து அந்த வழக்கை நடத்தினோம். எங்களுக்கு மனமில்லை என்றால் எப்படி சிறந்த வழக்கறிஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதாடியிருக்க முடியும்? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பதை உணர வேண்டியுள்ளது. 

புள்ளியல் சட்டம் பிரிவு 32 தெளிவாக கூறப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு இதனை கட்டுப்படுத்தாது என்று தெளிவாக கூறியுள்ளது. இந்த நடைமுறை கடைபிடிக்காமல் இட ஒதுக்கீடு கொடுத்தால் இந்த மூன்றாண்டுகளில் படிப்பவர்களில் நிலை என்ன ஆகும்? இட ஒதுக்கீடு சரியாக சட்டப்படியாக, யாருக்கும் பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம். மனசாட்சி உள்ள யாரும் முதல்வரின் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள். பாட்டாளி மக்கள் கட்சிக்கும் முதல்வரின் எண்ணம் என்ன என்பது தெரியும். இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பதில் உள்ள சட்ட சிக்கலை தான் நாங்கள் பேசி வருகிறோம. திமுக கொண்டுவரும் சட்டம் எந்த விதத்திலும் அடிபட்டு விடக்கூடாது என்பதற்காகவும் உச்சநீதிமன்றம் வரை சென்றாலும் நிலைத்து நிற்கக்கூடிய சட்டத்தை கொண்டு வந்து இட ஒதுக்கீடை கண்டிப்பாக தருவோம். 

2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும், தற்போது எடுக்கலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்கும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் எடுத்து புள்ளி விவரங்கள் கொடுத்தால் அடுத்த ஆறு மாதங்களில் இட ஒதுக்கீடு கொடுத்த சட்டத்தை இயற்றி விடுவோம். பாஜகவின் தோழமைக் கட்சியான பாமக அழுத்தம் கொடுத்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த சொல்லலாம்” என தெரிவித்தார்.