நடராஜர் இதை செய்திருந்தால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தேவையே இல்லை - பொன்முடி பேச்சு..

 
ponmudi

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நந்தனாரை வழிபட அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின்  தேவை வந்திருக்காது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாட்டில் உள்ள ஆவண காப்பகம் வரலாற்று ஆராய்ச்சி துறை மற்றும் டாக்டர் பழனி G.பெரியசாமி அறக்கட்டளையின் சார்பில், “பின் நகரும் காலம் -    தமிழக தொல்லியல் ஆய்வுகளை  முன் வைத்து” என்ற தலைப்பில் சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது.  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு,  உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார்.  இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள்  பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில்

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி அமைச்சர் , “அகழ்வாராய்ச்சி பணிக்காக 5 கோடியை முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார். ஆவண காப்பகம் வளர்ச்சிக்கு 2022 இல் கையேடு ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டார். ஆரிய நாகரிகத்திற்கு முன்பாகவே இந்தியாவின் தெற்கு பகுதியில் திராவிட நாகரிகம் இருந்தது என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அலெக்சாண்டர் படையெடுத்து வரும்போது  ஆரிய திராவிடம் இங்கே வந்தது. அதற்கு முன்பே இங்கே திராவிட நாகரீகம் இருந்தது.  மனித உணர்வு உருவாக்க வேண்டும், சமத்துவம் இருக்க வேண்டும், நீதி வழங்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல்.

நடராஜர் இதை செய்திருந்தால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தேவையே இல்லை - பொன்முடி பேச்சு..

ஒரு காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உள்ளே பெண்களை அனுமதிக்க மாட்டார்கள். அப்படியே போனாலும் வெளியில் நிறுத்திவிடுவார்கள். கோயில் மூலஸ்தானத்தில் சுவாமி இருக்கும் போது நந்தி நடுவில் இருக்கும். எல்லா இந்து கோயில்களிலும் சுவாமிக்கு எதிரே நந்தி சிலை இருக்கும். ஆனால் .சிதம்பரம் கோயிலில் மட்டும் தான் நந்தி விலகி இருக்கும். நந்தனர் வழிபட நடராஜர், நந்தியை விலகி இருக்க வேண்டும் என சொன்னதாக கூறுவார்கள். நந்தியை விலகியிருக்க சொன்ன நடராஜர், நந்தனரை உள்ளே அழைத்திருந்தால் இன்றைக்கு அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் தேவையில்லாமல் போயிருக்கும்.   இதை எல்லாம் மாற்றி அமைத்து தான் முதலமைச்சர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்தார்.  ” என்று கூறினார்..