"கோயில் யானைக்கு அனுமதி பெறவில்லை"- அமைச்சர் பொன்முடி

 
ponmudi

திருச்செந்தூர் கோயில் யானையை சிறப்பு முகாமிற்கு அனுப்புவது குறித்து முடிவு மருத்துவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு வனத்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாமல்லபுரம் - புதுச்சேரி  இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு , அந்த சாலையின் நடுவே சில இடங்களில் வனத்துறை நிலங்கள் வருவதால் சாலைப்பணிகள் முழுமை பெறாமல் உள்ளன.  அதற்கான அனுமதியை வழங்குவது  குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வந்துள்ளோம். யானை , புலி உட்பட வன உயிரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடலோர பகுதிகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்க வனத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை அனுமதி பெறாமல்தான் திருச்செந்தூரில் தெய்வானை யானையை வைத்திருந்தனர். அந்த யானை அசாம் மாநிலத்திலிருந்து வந்தது என ஊடகங்களில் கூட செய்திகள் வெளியாகியிருந்தன.

கோயில் யானைகளுக்கு வனத்துறையிடம்  அனுமதி பெறுவது குறித்து அறநிலையத்துறையிடம் பேசி வருகிறோம். திருச்செந்தூர் கோவில் யானையை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு முகாமுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும். தமிழக அரசின் மலையேற்றத் திட்டங்களை எதிர்த்து  நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது , சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அறநிலையத்துறையினர் கோயில் யானைகளை முறையாக பராமரிக்காத போதுதான் யானைகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. கோயில் யானைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு அறநிலையத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினருடையது. அரிட்டாபட்டி நிலம் வருவாய்துறையின் அறக்கட்டளை எனும் பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை உயிர் பன்முகத்தன்மை பகுதியாக ஏற்கனவே அறிவித்துள்ளோம். அந்த பகுதியில் 250 பறவைகள் ,  வெள்ளை வல்லூரு , ராசாளி பறவை போன்ற பல  புதிய பறவை இனங்கள் அங்கு உள்ளன அரிட்டாபட்டி பகுதி வனப்பகுதியாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம். அங்கு டங்க்ஸ்டன் ஆலை  ஆலை அமைப்பது குறித்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் வனத்துறையிடம் மத்திய அரசு அனுமதிக்கு  கேட்கும்போது அந்த திட்டத்தை  நிராகரிக்க தமிழக அரசு சார்பில் வலியுறுத்துவோம்” என்று கூறினார்.