"நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்”-எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி

 
minister periyasamy reply to edappadi palanisamy minister periyasamy reply to edappadi palanisamy

கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கவேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்துள்ளார்.

periyasamy

இதுதொடர்பாக ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய சட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு தவறான கூட்டணி வைத்துவிட்டதால் தடுமாறிக் கொண்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பரப்புரை என்ற பெயரில் தினசரி ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறார், இவர் சொல்லும் எதுவும் மக்களிடம் எடுபடவில்லை. எனவே, கிராமப்புறங்களில் சிறுதொழில் மற்றும் வணிகம் செய்ய உரிமக் கட்டணம் என்ற ஒரு சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏதோ புதிதாக கொண்டு வந்தது போல தனது வழக்கமான அவதூறு பிரச்சாரத்தை இன்று அவிழ்த்துவிட்டுள்ளார்.

உண்மையில் கிராம ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெறவேண்டும் என்பது 1958-இல் கொண்டுவரப்பட்டது. இது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-இல் பிரிவு 159-இன் படியும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. இதே சட்டத்தின்கீழ் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சிக்காலத்தில் “அபாயகரமானதும் மற்றும் தீங்குவிளைவிக்கும் வர்த்தக உரிமம் (Dangerous and Offensive Trade Licence)" என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்ததுதான் இந்த நடைமுறை! இதனைக்கூட தெரிந்துகொள்ளாமல் ஆட்சி நடத்திவிட்டு இப்போது வழக்கம்போல் தூக்கம் கலைந்து எழுந்து வந்து பரப்புரை என்ற பெயரில் பழைய அறிக்கை அரசியலையே நடத்திக் கொண்டிருக்கிறார்.

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், 2011-12-இல் 85,649 ஆக இருந்த வணிக உரிமங்களின் எண்ணிக்கை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சிக் காலத்தில் 2020-21இல் 2,05,100 ஆக உயர்ந்தது. அதேபோல் 2011-12-இல் ரூ.5.40 கோடியாக இருந்த உரிமக் கட்டணம் இவரது ஆட்சிக் காலத்தில் ரூ.12.90 கோடியாக உயர்ந்தது. இவையெல்லாம் கோப்புகளில் உள்ளது. அவர் மறுக்க முடியாது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு இன்றைக்கு கிராமப்புற சிறு வணிகர்களுக்காக பரிந்து பேசுவது போல இவர் நாடகம் ஆடுவதைப் பார்த்துப் பொதுமக்கள் ஏமாந்து போக தயாராக இல்லை.

2018-ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் மட்டும் வெளியிடப்பட்ட அரசிதழில் ஒன்றியம் வாரியாக, ஊராட்சி வாரியாக ஒவ்வொரு தொழிலுக்கும், எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ள தையல் கடை, பெட்டிக்கடை, சிறு உணவகம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழில்களுக்கும் உரிமக்கட்டணத்தை அரசிதழாக அச்சடித்து வழங்கியது அனைத்தும் அரசின் வசம் உள்ளது. இதனை நான் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. உரிமம் கட்டணம் என்பது எப்போதும் உள்ளது. அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலும் இருந்தது என்பதை நினைவூட்டவே சொல்கிறேன். கோவை மாவட்டத்திற்கு உரிமக் கட்டணம் குறிப்பிட்டு வெளியிட்டிருந்த அரசிதழ் நகலை இத்துடன் இணைத்துள்ளோம். இது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு ஊராட்சிக்கும் அவரது ஆட்சிக் காலத்திலேயே தொடர்ந்து வெளியிட்டுவிட்டு இப்போது இந்த அரசை குறை கூறுவது அவரது இரட்டை வேடத்தைத் தான் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

தமிழ்நாடு அரசின் தற்போதைய நடவடிக்கைக்கான பின்னணி


கிராமப்புற ஊராட்சிப் பகுதிகளில் வணிகம் / தொழில் புரிய பல்வேறு உரிமங்கள், "அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம்" என்று பழைய அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தன. அதுபோல, ஒவ்வொரு ஆண்டும் இந்த உரிமம் புதுபிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையும் இருந்து வருகிறது. இன்றளவிலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு வகையான நிறுவனங்கள் தொழில் / வர்த்தக உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வரி வருமானம் கிடைத்து வருகிறது.
தொழில் உரிமம் பெறுவதற்கான சட்டப்பிரிவு பல ஆண்டுகளாக இருந்த போதும் முறையான விதிகள் (Rules) இல்லாததால் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பல்வேறு விதமான கட்டணங்கள் நிர்ணயம் செய்து அதிக அளவில் கட்டணங்களை வசூலித்து வந்தன. இக்குறைகளை நீக்கும்பொருட்டு பல்வேறு வணிகர்களின் 
கோரிக்கைகளை ஏற்று இப்போது புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஆறாவது மாநில நிதிக்குழு, “அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம்” என வழங்கப்பட்டிருந்த பெயரை, "வணிக உரிமம்" என எளிமைப்படுத்தி மாற்றி வழங்க பரிந்துரை செய்துள்ளது. அதன்படி தற்போது வகுக்கப்பட்டுள்ள விதிகளில், "அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம்" என்ற பெயரை, "வணிகம் அல்லது தொழில் உரிம விதிகள்" என மாற்றி சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு 04.03.2024 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகம் அல்லது தொழில் உரிமம் பெறுவதற்கான நடைமுறை விதிகள் உருவாக்கப்பட்டு, 09.07.2025அன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இப்புதிய நடைமுறையின்படி, "ஆன்லைனில் வணிக உரிமம் பெறும் நடைமுறை” கொண்டு வரவும், முந்தைய சட்டப் பிரிவின்படி ஒவ்வொரு ஆண்டும் தொழில் உரிமம் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது என்றசலுகை” ““நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைவிட குறைந்த தொழில் உரிமக் கட்டணம் நிர்ணயம்” “வணிக உரிமம் பெறும் விண்ணப்பம் மீது 30 நாட்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால் உரிமம் வழங்கப்பட்டதாக கருதப்படும் (Deemed Approval) என்ற சலுகை” “விண்ணப்பங்களை முறையான விசாரணை உரிய வாய்ப்பு அளிக்காமல் நிராகரிக்கக்க கூடாது என்ற நிபந்தனை” என்றபல்வேறு நன்மைகள் இந்த புதிய விதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் எழை எளிய மக்களின்-குறிப்பாக வணிகர்களுக்கு துணைநிற்கும் அரசாகும். வணிகர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ள திராவிட மாடல் அரசின் நல்லெண்ணத்தின் மீது பழிபோட பழனிச்சாமி பகல் கனவு காண வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து கோரிக்கை மனு ஒன்றினை இன்று (30.07.2025) மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த கோரிக்கை மனுவிலுள்ள விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றினை அமைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்தக்குழு, கிராமப்புறங்களில் சிறு வணிகர்கள் வணிக உரிமம் பெறுவது குறித்த நடைமுறையினை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.