ரேசன் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம் - அமைச்சர் தகவல்

 
minister periyakaruppan

ரேஷன் கடைகளில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலம் வரை ரூ.2,000 நோட்டுக்களை பயன்படுத்தலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலம் வரை ரூ.2,000 நோட்டுக்களை பயன்படுத்தலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:- ரேஷன் கடைகளில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலம் வரை ரூ.2,000 நோட்டுக்களை பயன்படுத்தலாம். ரேஷன் கடைகளில் மட்டுமல்ல, அனைத்து கடைகளிலும் செப்டம்பர் 30 வரை ரூ.2,000 நோட்டுக்களை பயன்படுத்தலாம்.  ரூ.2,000 நோட்டு பணபரிவர்த்தனையில் அனைத்து வங்கிகளுக்குமான சட்டங்கள் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். கூட்டுறவு வங்கிகளிலும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். முன்னர் 500, 1000 ரூபாய் செல்லாது என திடீரென அறிவித்ததைப்போல் இல்லாமல் இந்த முறை 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பதை முன்னதாக தெரிவித்த மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் நன்றி. இந்த கால அவகாசத்தை உரியவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.