“கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கவில்லையெனில் 3 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும்- நிர்மல்குமார்
அக்டோபர் 31 வரை மட்டுமே கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மின் தேவை கடுமையாக உயர்ந்துள்ளது. பீக் அவர்ஸ் மின் தேவையை பூர்த்தி செய்யவே மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அக்டோபர் 31 வரை மட்டுமே கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். இதற்கு கூடுதலாக ரூ.5 கோடி மட்டுமே செலவாகும். காற்றாலை மின்சாரம் குறைந்ததால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின்தடை ஏற்படுவதை தடுக்கவே கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் நீண்ட கால மின்சார கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. எல்நினோ காரணமாக வெப்பநிலை குறையாததால் தமிழகத்தில் மின்சார தேவை அதிகரித்துள்ளது. காற்றாலை மின்சாரத்தில் இருந்து 3,000 மெகாவாட் மின்சாரம் வரவில்லை. ஒன்றிய அரசுதான் மின்தேவை அதிகரிப்பை கணிக்க தவறிவிட்டது.
ஒன்றிய தொகுப்பு NLC-யில் இருந்து நமக்கு வரக்கூடிய 1850 மெகாவாட் மின்சாரம் வரவில்லை. காற்றாலைகளின் வேகம் குறைந்ததால், அதில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வந்தது, 3000 மெகாவாட் வரவில்லை. இதோடு தேவையும் அதிகமானதால்தான் அதிக விலைக்கு வாங்குகிறோம். இதை நாம் செய்யலனா, பவர் கட் செய்ய வேண்டி வரும். மின்சாரத்தை கொள்முதல் செய்யவில்லை என்றால் 2 முதல் 3 மணிநேரம் வரை மின்வெட்டு ஏற்படும் நிலை. யூனிட் ரூ.35 என்ற விலையில் 1500 மெகாவாட் மட்டுமே மின்சாரம் வாங்க உள்ளோம். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5000 மெகாவாட் மின்சாரம் அதிகம் தேவைப்படுகிறது. கடந்த முறை தீபாவளி அன்று மின் தேவை அதிகரித்து மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது, எனவே அதற்கு தனித்திட்டம் உள்ளது. கூடுதலாக மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்காக நீண்ட கால ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளோம். 15 நாட்கள் மின் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் நீண்ட நாள் டெண்டர் விடப்படும். கடந்த திமுக ஆட்சியில் 4 அமைச்சர்கள் மின் துறைக்கு வந்தார்கள். அவர்கள் வழக்குகளைத்தான் பார்த்தார்களே தவிர மின் துறையைப் பார்க்கவில்லை. மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

