தமிழக நலனை பாஜகவிடம் அடகு வைக்க திமுக முயற்சி- அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
தொகுதி மறுவரைவு மசோதாவின்போது திமுக வெளிநடப்பு செய்யப்போவதாக தகவல் வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “அரசியல் காரணங்களுக்காகவே மத்திய அரசு தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது. இதன்மூலம் மக்கள்தொகை அடிப்படையில் தமிழகத்தின் எம்பி தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. இது சிறுபான்மை மக்களை ஒதுக்கும் செயல். எனவே தமிழகத்தின் உரிமைகளை காக்க அனைவரும் ஒருங்கிணைந்து இந்த மசோதவை எதிர்க்க வேண்டும். தொகுதி மறுவரைவு மசோதாவின் போது திமுக வெளிநடப்பு செய்ய திட்டமா? திமுக வெளிநடப்பு செய்தால் தமிழகத்திற்கு துரோகம். தமிழக நலனை பாஜகவிடம் அடகு வைக்க திமுக முயற்சிக்கிறது. மறுவரையறை மசோதாவை முறியடிக்க வேண்டும். மசோதாவுக்கு எதிராக திமுக வாக்களிக்க வேண்டும். தமிழகத்திற்கு தொகுதி மறுவரையறை தேவையில்லை. அதுதான் மக்களுடைய தேவை. தொகுதி மறுவரையறை என்பது தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் சூழல். எந்த கோரிக்கையும் வராத போது, எதற்கு இந்த தொகுதி மறுவரையறை? தேர்தல் எண்ணிக்கைக்காகவும், தேர்தலை சுலபமாக எதிர்கொள்ளவே இதை பாஜக செய்கிறது” என்றார்.

